ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் உலகின் உயிர் பன்மைத்துவம் கொண்ட மலைப் பிரதேசமாகும். இயற்கை அன்னையின் புன்னகை பூக்கும் யூகலிப்டஸ் மற்றும் பைன் மரங்கள், காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் கொண்ட அதன் அழகிய நிலப்பரப்புகளுடன் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான சுற்றுலா அம்சங்கள் உள்ளன. படகு சவாரி மற்றும் மலையேற்ற வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஊட்டியில் பார்க்க வேண்டிய 10 சிறந்த சுற்றுலாத் தலங்கள் மற்றும் செய்ய வேண்டியவை ஆகியவற்றை இங்கு பார்ப்போம்.
ஊட்டியில் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் #1: ஊட்டி ஏரி
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஏரி (Ooty Lake) கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலமாகும். 1824-ஆம் ஆண்டில் ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்ட, மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரி 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள படகு இல்லம் மிகப் பிரபலமான ஒன்று. இயற்கையின் பேரெழில் கொஞ்சும் யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் நீலகிரி மலைத்தொடரால் சூழப்பட்டுள்ள கண்களுக்கும் மனதிற்கும் இனிய இடமாகும் இது. அமைதியான ஏரியில் படகு சவாரி வசதி உள்ளது, மேலும் சுற்றுலா பயணிகள் துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் அல்லது ரோயிங் படகுகளை வாடகைக்கு எடுக்கலாம். குழந்தைகள் மினி ரயிலில் சவாரி செய்து, பேய் வீடு மற்றும் கண்ணாடி வீடு கொண்ட கேளிக்கைப் பூங்காவில் விளையாடி மகிழலாம்.
இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் 2022-ல் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்
ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள் #2 – தாவரவியல் பூங்கா
22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா (Botanical Gardens) ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆயிரம் வகையான தாவரங்கள், புதர்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மலர்கள், சூரல்கள், மூலிகைகள், போன்சாய்கள் மற்றும் மரங்கள் போன்ற அரியவகை எழில் தாவரங்கள் கண்களுக்கு விருந்தாகும். தாவரவியல் பூங்காவில் மருத்துவ தாவரங்கள், பெரணிகள் என்னும் சூரல்கள் மற்றும் இத்தாலிய பாணியில் அமைக்கப்பட்ட மலர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு புல்வெளிகள் உள்ளன. குறிப்பாக, பிரதான புல்வெளியில் பலதரப்பட்ட மலர்கள், தாவரங்கள், மரங்கள் கொண்ட இந்திய ஒன்றியத்தின் அசத்தும் வடிவமைப்பைக் காணலாம். கீழ் தோட்டத்தில் 127 வகையான பெரணிகள் உள்ளன, அதே நேரத்தில் புதிய தோட்டம் ரோஜாக்கள் மற்றும் இயற்கையான மலர் கம்பளங்களை வளர்க்கிறது மேலும் இங்கு ஒரு குளமும் உள்ளது. செழிப்பான, நன்கு பராமரிக்கப்படும் புல்வெளிகள், காகித பட்டை மரம், கார்க் மரம் மற்றும் குரங்கு புதிர் மரம் (குரங்குகள் இந்த மரத்தில் ஏற முடியாது), 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவ மரம் மற்றும் இத்தாலிய பாணி தோட்டம் போன்றவை இதை ஊட்டியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக மாற்றுகின்றன. அரிய தோடா பழங்குடியினர் குறித்த கவனத்தை ஈர்க்கும் மற்றொரு அதிசயமான தோடா முண்ட் இங்குதான் உள்ளது.
ஊட்டியில் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் #3: தொட்டபெட்டா சிகரம்
நீலகிரி மாவட்டம், ஊட்டி – கோத்தகிரி சாலையில், தொட்டபெட்டா என்ற மலைச் சிகரம் உள்ளது. ‘பெரிய மலை’ என்று பொருள்படும் தொட்டபெட்டா நீலகிரி மலைத்தொடரின் மிக உயரமான இடமாகவும், உண்மையில் ஊட்டியில் பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. 2,623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் (Doddabetta Peak) தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. அதன் சரிவுகளின் பள்ளங்களை சோலைகள் அலங்கரிக்கின்றன. அழகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தொட்டபெட்டாவின் ஒட்டுமொத்த அழகை அதிகரிக்கின்றன. பெரிய மலர்களையுடைய உயரமான ரோடோடென்ட்ரான் செடிமர வகைகள், பூக்கும் ஆல்பைன் புதர்கள் மற்றும் மூலிகைகள் சிகரத்திற்கு அருகில் காணப்படுகின்றன. தொட்டபெட்டா பள்ளத்தாக்கின் அருமையான பரந்த காட்சியையும் கோயம்புத்தூர் சமவெளிகளையும், மைசூரின் மேட்டு நிலங்களின் காட்சியையும் நமக்கு வழங்குகின்றன. இந்த சிகரத்திற்கு நீங்கள் நடந்து செல்லலாம் அல்லது வாகனங்களை ஓட்டிச் செல்லலாம். சிகரத்தின் உச்சியில் ஒரு தொலைநோக்கி இல்லம் உள்ளது. சுற்றிலும் மனதைக் கொள்ளை கொள்ளும் பள்ளத்தாக்கைக் காண இரண்டு தொலைநோக்கிகள் உள்ளன.
ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள் #4: எமரால்டு ஏரி
ஊட்டியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த அருமையான எமரால்டு ஏரி (Emerald Lake). அமைதியான பள்ளத்தாக்கில் உள்ள எமரால்டு ஏரி ஊட்டியில் பார்க்க வேண்டிய ஓர் அழகான இடமாகும். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் புல்வெளிகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி பேரமைதி கொண்டது மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் இயற்கையின் மடியில் சிறிது நேரம் அனுபவிக்க சரியான இடம் இதுவே. சுற்றியுள்ள காடுகள் மற்றும் ஏரியின் நீல நீர், பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகும். இங்கு வாத்துகள் மற்றும் பிற நீர்வாழ் விலங்குகள் உட்பட பல்வேறு வகையான பறவைகளை நீங்கள் காணலாம். இங்குள்ள சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் பிரமிக்க வைக்கும், தவறவிடக்கூடாத அரிய காட்சிகளாகும்.
இதையும் வாசிக்க: த்ரில் அனுபவம் பெற தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள் #5: முதுமலை தேசியப் பூங்கா
முதுமலை தேசியப் பூங்கா (Mudumalai National Park) வன உயிரிகளின் சரணாலயமாகும். இது, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் முச்சந்திப்பில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட இப்பகுதி அதிகாரபூர்வ புலிகள் காப்பகமாகும். மேலும் யானை, மலபார் அணில், நீலகிரி லங்கூர், இந்திய பாறை மலைப்பாம்பு, புள்ளி மான், வங்காள புலி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு அழிந்து வரும் உயிரினங்கள் உள்ளன. இந்த சரணாலயத்தில் அழிந்து வரும் இந்திய வெள்ளை நிற கழுகு மற்றும் நீண்ட கால கழுகு உட்பட குறைந்தது 266 வகையான பறவைகள் உள்ளன. பெரிய அளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. பார்க் வேன் சஃபாரியில் வலம் வந்து அனுபவம் பெறலாம். ஒரு சுற்றுலாப் பயணி யானை சஃபாரிக்குச் செல்லலாம், இருப்பினும், யானைகள் அடர் காட்டுப் பகுதிக்குள் செல்வதில்லை.
ஊட்டியில் அவசியம் பார்க்க வேண்டிய இடம் #6 – ரோஜா தோட்டம்
அரசு நடத்தும் ரோஜா தோட்டம் (Rose Garden) ஊட்டியில் மிகவும் பிரபலமானதாகும். ஊட்டியின் பெருமை என்று அழைக்கப்படும் ரோஜா தோட்டம் உலக ரோஜா சங்கங்கள் கூட்டமைப்பின் தெற்காசியாவுக்கான சிறந்த தோட்டத்திற்கான விருதை வென்றுள்ளது. தமிழக அரசால் பராமரிக்கப்படும் இந்த ரோஜா தோட்டத்தில் இந்தியாவிலேயே அதிக வகை ரோஜாக்கள் உள்ளன. 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் 20,000-க்கும் அதிக வகையான ரோஜாக்களைக் கொண்ட இந்தத் தோட்டம் ஐந்து மொட்டை மாடிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹைபிரிட் டீ ரோஜாக்கள், ரேம்ப்ளர்கள், மினியேச்சர் ரோஜாக்கள், பச்சை ரோஜாக்கள், கருப்பு ரோஜாக்கள், பாப்பாஜினோ மற்றும் ஃப்ளோரிபுண்டா போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கலாம். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பூக்கள் பூத்துக் குலுங்கும்.
இதையும் வாசிக்க: சென்னையில் பார்க்க வேண்டிய 15 இடங்களும் செய்ய வேண்டியவையும்
ஊட்டியில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் #7: தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தேயிலைத் தொழிற்சாலை
ஊட்டி நகரம் முழுவதும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தேயிலை தொழிற்சாலை ( Tea Museum and Tea Factory) ஆகியவை ஊட்டியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாகும். தொட்டபெட்டா சிகரத்திற்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்ட காட்சி முனை (வியூ பாயின்ட்) பார்க்க வேண்டிய ஒன்றாகும். தொழிற்சாலையில் முழு தேயிலை உற்பத்தி செயல்முறையையும் நீங்கள் காணலாம். ஒரு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பசுமையான நீலகிரியின் மடியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில், தேயிலை இலைகளை உலர்த்துவது முதல் இறுதி பேக்கிங் வரையிலும், இலை முதல் தேயிலை வரையிலான உற்பத்திச் சுழற்சியையும் நீங்கள் காணலாம். தேயிலை அருங்காட்சியகம் பல்வேறு வகையான தேயிலை இலைகளை உருவாக்கும் செயல்முறை மற்றும் தேயிலையின் பரிணாம வளர்ச்சியை காட்சிப்படுத்துகிறது. நீங்கள் ஒரு மாதிரி கப் ஏலக்காய் தேநீர் அல்லது சாக்லேட் தேநீரையும் பருகி அனுபவிக்கலாம். நினைவுப் பரிசுக் கடையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக எடுத்துச் செல்ல பலவிதமான தேநீர் தூள்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள் #8: புனித ஸ்டீபன் தேவாலயம்
ஆதாரம்: திமோதி ஏ.கோன்சால்வ்ஸ், விக்கிபிடியா காமன்ஸ்
புனித ஸ்டீபன் தேவாலயம் (St Stephen’s Church) ஊட்டியில் பார்க்க வேண்டிய ஒரு கட்டிடக் கலை அற்புதமாகும். நீலகிரியில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றான இந்த தேவாலயம் அதன் விக்டோரியா கால கட்டிடக் கலை, கடிகார கோபுரம் மற்றும் வேலைப்பாடுகள் கொண்ட கண்ணாடி ஜன்னல்களுக்கு பெயர் பெற்றது. மற்ற காட்சிகளுடன், கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதைக் காட்டும் காட்சி மற்றும் மேரி குழந்தை இயேசுவை கைகளில் ஏந்தியக் காட்சி மிகவும் அபாரமானதாகும். கிறித்துவ மதத்தின் பெரிய குறியீட்டு அர்த்தங்கள் நிரம்பிய இறுதி இரவுணவு பற்றிய ஒரு பெரிய ஓவியம் இந்த தேவாலயத்தின் சுவர்களை மேம்படுத்துகிறது. சுவாரஸ்யமான உண்மை: மைசூர் போரில் ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை தோற்கடித்த பின்னர் அவரது அரண்மனையில் இருந்து பிரதான தூண் மற்றும் மரம் ஆகியவை யானைகளால் இங்கு கொண்டு வரப்பட்டது. தேவாலயத்தின் அமைதியான சூழல் பிரார்த்தனைக்கான ஓர் அழகான ஓய்விடமாக அமைந்துள்ளது.
ஊட்டியில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் #9: கேத்ரீன், கல்ஹாத்தி மற்றும் பைக்காரா அருவி
அருவிகள் என்றாலே பிரமிப்பும் ஆச்சரியமும் அழகும் கலந்த பேருவகைகளை கிளப்புபவைதான். அதிலும் ஊட்டியில் உள்ள இந்த மூன்று அருவிகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஓர் அனுபவமாகும். இவை இயற்கை மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு ஏற்ற இடங்களாகும். ஊட்டியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள் அற்புதமான மலையேறு தலங்களாகவும் குடும்பங்கள் கண்டு களித்திட அருமையான சுற்றுலா ஸ்தலங்களாகவும் அறியப்படுகின்றன. கேத்ரீன் அருவி (Catherine Falls) அதன் வசீகரிக்கும் அழகுக்கு பெயர் பெற்றது. 250 மீட்டர் உயரத்திலிருந்து இறங்கும் பிரமிப்பூட்டும் அருவி மற்றும் சுற்றியுள்ள பசுமையான, அடர்த்தியான காடுகள் எந்த வித குறையும் கூற முடியாத இயற்கைப் பின்னணியைப் படைத்துள்ளது. ஊட்டியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்ஹாத்தி அருவி (Kalhatti Falls) பெல்லிகாவில் அமைந்துள்ளது. இந்த அருவி, பறவை ஆர்வலர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் அருவியின் உச்சிப் பகுதி முழு பள்ளத்தாக்கினையும் பார்க்கக் கூடிய மிக அற்புதமான வானுயுரக் காட்சியை உங்களுக்கு வழங்குகிறது. பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் பைக்காரா அருவி (Pykara Falls) நம் நினைவகத்திற்குள் பிடித்துவைக்க வேண்டிய ஒரு காட்சியாகும். 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்திலிருந்து வீசும் இந்த அருவி இரண்டு தனித்தனி பிரிவுகளாக உருவாகி பாறைகள் மீது பாய்வதற்கு முன்பு அடிப்பகுதியில் இணையும் அற்புதக் காட்சியைக் கொண்டது.
ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள் #10: மாரியம்மன் கோயில்
ஆதாரம்: ஃபேஸ்புக்
ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோயிலின் அழகான, ஐந்து நிலை கோபுரம் மிகவும் கவர்ச்சிகரமானது. காளி தேவியின் ஒரு வடிவமாகக் கருதப்படும் மாரியம்மன், மகாமாயி அல்லது சீதளா கௌரி என்றும் அழைக்கப்படுகிறார், மேலும், இது மழைத் தெய்வமாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் மாரியம்மனின் சகோதரி காளியம்மனும் அருள்பாலிக்கிறார். தெய்வங்கள் சேர்ந்து நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், கோயிலில் தெய்வங்களை வணங்கும் திருவிழா நடத்தப்படுகிறது, அங்கு பக்தர்கள் தீமிதி வேண்டுதல் சடங்கு நிறைவேற்றுகின்றனர். இங்கு நவக்கிரகங்கள் தங்கள் துணைவியருடன் இருப்பதால் இந்த மாரியம்மன் கோயில் (Mariamman Temple) தனிச்சிறப்பு வாய்ந்தது.
இதையும் வாசிக்க: கொடைக்கானலில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்
ஊட்டியில் செய்ய வேண்டியவை
தேனிலவு கொண்டாடும் தம்பதிகளாயினும், குடும்பமாயினும் ஊட்டி ரசித்து மகிழ ஏற்ற மலை வாசஸ்தலம். பொம்மை ரயில் பயணம் முதல் தேநீர் சுவை வரை, இந்த அழகான மலை வாசஸ்தலம் பல சாகசங்களையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. ஊட்டி தனது பசுமை, இனிமையான வானிலை போன்ற உடல்/மன சவுகரியங்களை வழங்குவதால் பலரது சாகச விருப்பங்களுக்கான தெரிவையும் சேர்த்து வழங்குகிறது.
பொம்மை ரயில் பயணத்தை ரசித்து மகிழுங்கள்
ஊட்டியின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்று மலைப்பாதையில் ஓடும் பொம்மை போன்ற ரயில். இது 1899-ம் ஆண்டு தொடங்கி சுற்றுலாப் பயணிகளை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. ஊட்டி பொம்மை ரயில் அல்லது நீலகிரி மலை ரயில்வே 2005-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நீலம் மற்றும் கிரீம் நிறப் பெட்டிகள் மற்றும் மர பெஞ்ச்களைக் கொண்ட இந்த ரயில் நீலகிரி மலை நிலையங்களை வலம் வருகின்றது. – பசுமையான தேயிலை தோட்டங்கள், உயரமான நீலகிரி மலை மற்றும் யூகலிப்டஸ் மரங்கள், அழகான பாலங்கள் மற்றும் எண்ணற்ற சுரங்கங்கள் ஆகியவற்றை இந்த ரயில் நம் கண்களுக்கு விருந்தாகும் இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த பொம்மை ரயில் 46 கி.மீ தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து உண்மையிலேயே கண்கவர் பயணத்தை நமக்கு வழங்குகின்றது.
ஊட்டியில் மலையேறுதலும் முகாம் அமைத்தலும்
கொஞ்சும் இயற்கை எழில்களை ரசிக்க ஊட்டிக்கு வருபவர்கள் பலர் என்றால், மலையேறும் சாகசம் (Trekking) செய்ய வருபவர்களும் கணிசமாக உள்ளனர். இந்த மலைவாசஸ்தலத்தில் மலைத்தொடர்களில் பல மலையேற்ற பாதைகள் உள்ளன. செங்கோட்டையார் மலையேற்றம் ஊட்டியின் மலைத்தொடர்களில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் காடுகளின் மனதை கவரும் காட்சிகளை காண அழைக்கின்றது. சோலா வனப்பாதையில் சலசலக்கும் நீரோடைகளைத் தவிர அழகான கிராமங்கள் மற்றும் பழங்குடி குடியிருப்புகள் உள்ளன. தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் வளமான வனவிலங்குகள் நிறைந்த கோத்தகிரி – எல்க் மிகவும் விரும்பப்படும் பாதைகளில் ஒன்றாகும். பார்சன்ஸ் வேலி, முக்குர்த்தி ஏரி, மடுமலை, பைக்காரா, அவலாஞ்சி மற்றும் பங்கிடப்பல் ஆகியவையும் பிரபலமான மலையேற்ற இடங்களாகும். சூச்சிமலை (நீடில் ராக் வியூ பாயின்ட்) ஒரு பிரபலமான மலையேற்ற இடமாகும். அங்கு அருவி உள்ள மலையேற்ற இடம் உள்ளது. இங்கு நீங்கள் கூடாரம் அமைத்துக் கொள்ளலாம். அவலாஞ்சி ஏரி மலைகளால் சூழப்பட்ட ஒரு மிகச் சரியான முகாம் (camping) அமைத்துக் கொள்ள ஏற்ற இடமாகும்.
மவுன்டைன் பைக் பார்க்
நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் கட்டப்பட்ட ஊட்டியில் உள்ள மவுன்டைன் பைக் பார்க் (Mountain Bike Park) சாகச பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த மவுன்டைன் பைக் பார்க் ஒரு சாகச அனுபவமாகும். உண்மையான மலைப்பாதையை போல் அச்சு அசலாக உருவாக்கப்பட்ட புடைப்புகள் மற்றும் வளைவுகள், டீட்டர்-டாட்டர்கள் என்று அழைக்கப்படும் மலைப்பாதை மேடு பள்ளங்கள், சுவிட்ச் பேக்குகள், மெது குழிகள், தொங்கு பாலம், ஜம்ப் சாய்வு தளங்கள், போன்ற சுவாரஸ்யமான அம்சங்கள் மவுன்டைன் பைக் பார்க்கிற்கு வருகை தருவதை மறக்க முடியாத அனுபவமாக மாற்றக்கூடியவை.
ஊட்டியில் ஷாப்பிங்
அழகிய மலைவாசஸ்தலமான ஊட்டியில் ஷாப்பிங் செய்வதற்கான பல தெரிவுகள் உள்ளன. இங்கு பலவிதமான சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் நம்மை வரவேற்கின்றன. ஊட்டியில் வீட்டில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகளுக்கு பிரசித்தி பெற்றது. சாரிங் சாலையில் உள்ள பேக்கரிகளில் நுழைந்து பால், டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட், முந்திரி, திராட்சை அல்லது ஸ்ட்ராபெர்ரி என உங்களுக்கு விருப்பமான சுவையைத் தேர்ந்தெடுக்கலாம். நீலகிரி பெரும்பாலும் தேயிலைத் தோட்டப் பகுதியாகும். எந்த விதமான தேயிலைத் தூள்கள் மற்றும் இலை, கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை வகைகள் அல்லது மசாலா, மல்லிகை மற்றும் ஏலக்காய் தேநீர் பாக்கெட்டுகளுக்கு ஊட்டியை விட்டால் வேறு இடம் கிடையாது என்றே கூறலாம். ஊட்டி, நறுமண அத்தியாவசிய எண்ணெய்களுக்கும், குறிப்பாக யூகலிப்டஸ், சிட்ரோனெல்லா மற்றும் கற்பூரத்திற்கும் பெயர் பெற்றது. ஊட்டியில் இயற்கை முறையில் விளையும் சிறந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளது. கமர்சியல் ரோட்டில் கையால் செய்யப்பட்ட சாக்லேட்டுகள், தோல் பொருட்கள், நறுமண எண்ணெய்கள், கைவினைப் பொருட்கள், நகைகள் மற்றும் கம்பளி ஆடைகளுக்கான கடைகள் உள்ளன. கேரளாவின் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் மற்றும் கதர் கிராமோத்யோக் பவன் உள்ளிட்ட சில பல்பொருள் அங்காடிகள் மற்றும் பெரிய கடைகள் உள்ளன. ஆடைகள், ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் மற்றும் வெள்ளி நகைகளுக்காக ஊட்டியில் உள்ள மெயின் பஜாருக்கு விஜயம் செய்யுங்கள். சால்வைகள், ஜாக்கெட்டுகள், கையுறைகள், பின்னல் கம்பளி ஆடைகள் மற்றும் குரங்கு தொப்பிகள் போன்ற கம்பளி ஆடைகளுக்கு திபெத்திய சந்தை பிரபலமானது. லோயர் பஜார் சாலையில் ஜவுளிகள் மற்றும் ஆடைகள் முதல் சாக்லேட்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.
ஊட்டியில் ருசிக்க வேண்டிய உணவு வகைகள்
ஊட்டியில் பல வகை சமையல்களுக்கான உணவகங்கள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு மூலையிலும், நீங்கள் தென்னிந்திய உணவகங்களைக் காணலாம். இப்பகுதியில் பெரும்பாலான உணவுகள் தேங்காய், தேங்காய் எண்ணெய், பெருங்காயம் மற்றும் புளி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பிரபலமான காலை உணவாக இட்லி, தோசை, ஊத்தாப்பம், வடை மற்றும் உப்புமா, இவற்றுக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் பரிமாறப்படுகிறது. மதிய உணவு மற்றும் இரவு உணவில் சாதம், அரிசி அப்பளம் மற்றும் சட்னியுடன் கூடிய கறி இருக்கும். அவியல் இங்கு மிகவும் பிரபலம். அவியல் மிதமான மசாலா மற்றும் ஏழு முதல் எட்டு காய்கறிகளுடன் சமைக்கப்படுகிறது. இது உள்ளூர் உணவு வகையாகும். ஊட்டியில் விதவிதமான தோசை வகைகள் இருந்தாலும் நீர் தோசை கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒன்று. செட்டிநாடு சிக்கன் என்பது தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்படும் மிளகு கிரேவி கலந்த ஒரு உன்னதமான தென்னிந்திய உணவாகும். கொழுக்கட்டை இங்கு ஒரு பிரபலமான இனிப்பு உணவாகும். ஊட்டியில் வீட்டில் தயாரிக்கப்படும் சிறந்த சாக்லேட்டுகளும் உள்ளன. ஊட்டி வர்க்கி என்பது ஒரு பிரபலமான நொறுக்குத்தீனி. ஊட்டி வர்க்கியுடன் உள்ளூர் தேநீர் அல்லது காபியை தவறவிட்டால் ஊட்டிக்குப் போய் வந்த பயணம் நிறைவடைந்ததாகாது.
ஊட்டி அருகே பார்க்க வேண்டிய இடங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
ஊட்டிக்கு அருகில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் எவை?
ஊட்டிக்கு அருகிலுள்ள மிக அழகான சுற்றுலாத் தலங்களில் ஒன்று, தேயிலை பாதைகளுக்கும் நீலகிரி மலைகளுக்கும் பெயர் பெற்ற குன்னூர் ஆகும். ஊட்டிக்கு அருகிலுள்ள மற்றொரு இடம் மைசூர் ஆகும். இது அரச பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 85 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூரில் அற்புதமான மலைக்காட்சிகள், அருவிகள், கோயில்கள் மற்றும் ஆண்டு முழுவதும் இனிமையான வானிலை ஆகியவை அற்புதமான ஓர் அனுபவமாகும்.
ஊட்டியை சுற்றிப் பார்க்க எத்தனை நாட்கள் தேவைப்படும்?
ஊட்டியின் அருவிகள், மலைகள், ஏரிகளில் படகு சவாரி வசதிகள் மற்றும் வண்ணமயமான தாவரவியல் பூங்காக்களைக் கொண்ட ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். அதன் அழகையும் முக்கிய இயற்கை எழில்களையும் ரசிக்க குறைந்தது மூன்று நாட்களாவது தேவைப்படும்.
ஊட்டிக்கு சுற்றுலா பயணத்துக்கு உகந்த காலம் எது?
ஊட்டியில் ஆண்டு முழுவதும் இதமான வானிலையும், குளிர்ந்த இரவுகளில் வெப்பநிலை 5 முதல் 15 டிகிரி வரை இருக்கும். அக்டோபர் முதல் ஜூன் வரையிலான காலகட்டம் வெளிப்புற நடவடிக்கைகளைத் தொடர ஏற்ற வானிலையாகும். மழையையும் பசுமையையும் நீங்கள் விரும்பினால் மழைக்காலத்தில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஊட்டிக்கு பயணம் செய்யலாம்.