தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்று சொத்து வரி. அந்த வருவாய் மூலமாக தான் கோவை மாநகராட்சியின் பல்வேறு பணிகளும் உள்ளாட்சி அதிகாரத்தால் நிறைவேற்றப்படுகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சி தனது அதிகாரபூர்வ வலைதளம் மூலம் குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று எளிமையான முறையில் சொத்து வரி செலுத்தும் வசதியாகும். சொந்தமாக வீடு அல்லது வணிகக் கடைகள் வைத்திருப்பவர்கள் கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். மாநகராட்சிக்கு செலுத்தப்படும் சொத்து வரியின் மூலமாகவே நகரின் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சி தனது எல்லையான சுமார் 246 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில், ஆண்டுக்கு இரண்டு முறை சொத்து வரி வசூலிக்கிறது. கோயம்புத்தூரில் சொத்து வரி செலுத்துவது தொடர்பான பல்வேறு அம்சங்களை நாம் இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
இதையும் வாசிக்க: இந்தியாவில் சொத்து வரி குறித்த முழு விவரம்
ஆன்லைனில் சொத்து வரி செலுத்தும் வழிமுறை: ஆன்லைன் மூலம் கோவையில் சொத்து வரி செலுத்துவது எப்படி?
கோயம்புத்தூர் நகரில் உங்களின் வீடு இருந்தால், கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி உங்களது சொத்து வரியை நீங்கள் செலுத்தலாம்:
படி 1: முதலில் கோவை அதிகாரபூர்வ CCMC வலைதளம் செல்லுங்கள். அதில் அப்படியே ஸ்க்ரால் செய்து Online Tax Payment ஆப்ஷனுக்கு கீழே ‘Pay Your Tax Online’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 2: இப்போது உங்கள் திரையில் https://tnurbanepay.tn.gov.in/ என்கிற அந்தந்த மாவட்டத்திற்கான வரி செலுத்தும் வலைதளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பீர்கள்.
அந்த முகப்பு பக்கத்தில் உள்ள ‘Quick Payment’ எனும் ஆப்ஷனில் உள்ள ‘Property Tax’ என்பதை க்ளிக் செய்து நீங்கள் கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தலாம்.
பின்னர் அடுத்து வரும் பக்கத்தில், வரி செலுத்துவதற்கு தேவையான, மதிப்பீட்டு எண் (Assessment number), பழைய மதிப்பீட்டு எண் (Old Assessment number) முதலான தகவல்களை உள்ளீடு செய்யவேண்டும்.
படி 3: நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்த பயனராக இருந்தால், பதிவு செய்யப்பட்ட உங்களுடைய மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி வலைதளம் உள்ளே செல்லலாம். இப்போதுதான் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் புதிய பயனராக இருந்தால், அந்த வலைதளத்தில் உள்ள ‘New User Registration’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து தேவையான தகவல்களை உள்ளீடு செய்த பின்னர், ‘Submit’ பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
படி 4: நீங்கள் வலைதளத்தில் லாகின் செய்த பிறகு, திரையில் தெரியும் ‘Make Payment’ என்கிற பணம் செலுத்தும் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 5: அதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில், மதிப்பீட்டு எண், பழைய மதிப்பீட்டு எண் முதலான தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். சொத்து விவரங்களை அறிய ‘Search’ பட்டனை க்ளிக் செய்யலாம்.
படி 6: விவரங்களை சரிபார்த்த பின்னர் ‘Submit’ ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 7: அதனைத் தொடர்ந்து வரும் பக்கத்தில், கேப்ச்சா (captcha) குறியீட்டை உள்ளிட்டு ‘Confirm’ பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
படி 8: திரையில் தெரியும் கட்டணம் செலுத்துவதற்கான நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ (UPI) வழிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலமாக ‘Make Payment’ ஆப்ஷனை க்ளிக் செய்து தொடருங்கள்.
படி 9: அதனைத் தொடர்ந்து திரையில் ரசீது எண்ணுடன் வரி செலுத்தப்பட்டதற்கான பரிவர்த்தனை உறுதிப்படுத்தலை நீங்கள் பெறுவீர்கள். அந்த ரசீதை சேமித்து வைத்து, வருங்கால தேவைக்காக அதனைப் பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
இதையும் வாசிக்க: கொல்கத்தாவில் ஆன்லைன் மூலமாக கேஎம்சி சொத்து வரி செலுத்த வழிகாட்டுதல்கள்
கோவை மாநகராட்சி சொத்து வரிக்கான ஆன்லைன் ரசீது
கோயம்புத்தூர் மாநகராட்சி வலைதளத்தில் ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்தும் நடைமுறைகளை முடித்த பின்னர், நீங்கள் சொத்து வரி செலுத்தியதற்கான ஆன்லைன் ரசீது திரையில் வரும். அதில், ஆவணத்தில் விண்ணப்ப எண், மதிப்பீட்டு ஆண்டு, செலுத்த வேண்டிய சொத்து வரி, செலுத்த வேண்டிய இடம், பொருந்தக்கூடிய செஸ் வரி, செலுத்தப்பட்ட ஏதேனும் முன்பணம் மற்றும் செலுத்த வேண்டிய சொத்து வரியின் மொத்தத் தொகை உள்ளிட்ட கட்டண விவரங்கள் அடங்கி இருக்கும். வரி செலுத்தியதற்கான ரசீதை ஆன்லைனில் பெற்றதும், வரி செலுத்துவோர் தங்களது எதிர்கால தேவைக்காக அதனை பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.
ஆன்லைனில் கோவை சொத்து வரி செலுத்த தேவையான ஆவணங்கள்
சொத்து வரியை அதன் நிலுவைத் தேதிக்கு முன்னதாக செலுத்துவதற்கு முன், அதற்குத் தேவையான ஆவணங்கள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சொத்து வரியை மதிப்பிடுவதற்கு கீழ்கண்ட ஆவணங்கள் தேவை:
- சொத்து வரி மதிப்பீட்டு விண்ணப்ப படிவம்
- சொத்து உரிமைக்கான ஆவணங்கள்
- அங்கீகரிக்கப்பட்ட திட்டம் மற்றும் கட்டிட உரிமத்தின் உண்மையான நகல்கள்
கோயம்புத்தூர் சொத்து வரி கணக்கீடு
ஆன்லைன் மூலமாக சொத்துவரி செலுத்துவோர், கோவை மாநகராட்சியின் அதிகாரபூர்வ தளமான ccmc.gov.in-ல் ஆன்லைன் சொத்து வரி கால்குலேட்டரை பயன்படுத்தலாம். வீட்டு வரியை ஆன்லைனில் செலுத்துவதற்கு முன்பாக, சொத்து உரிமையாளர்கள் தங்களின் சொத்து வரியை இந்த ஆன்லைன் கருவி மூலம் கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளலாம். சொத்து வரி விகிதம் என்பது இடம், சொத்தின் வயது (எவ்வளவு ஆண்டுகள்), சொத்தின் வகை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. வரி கணக்கீட்டிற்கு, வீடு அமைந்திருக்கும் மொத்தப் பரப்பளவு பகுதியை (PA) தீர்மானிக்க வேண்டியது அவசியம். இது சுவர்களால் மூடப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய மொத்தப் பகுதி ஆகும். இதில் பால்கனிகள் மற்றும் கேரேஜ்களும் அடங்கும்.
அது சுய உடமைச் சொத்தாக அதாவது வரி செலுத்த வேண்டியவர் வசிக்கும் வீடு அவரின் சொந்த வீடாக இருந்தால், சொத்து வரியைக் கணக்கிடுவதற்கு முன், அப்பகுதியில் உள்ள மற்றச் சொத்துக்களுக்கான அப்போதைய சந்தை வாடகை என்பது ஒரு சதுர அடிக்கு எவ்வளவு என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அந்தச் சொத்து வாடகைக்கு விடப்பட்டால், அந்த சொத்திற்கான ஒரு சதுர அடி வாடகையாக வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாதாந்திர வாடகை மதிப்பு (MRV) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கோயம்புத்தூரில் கீழ்கண்ட காரணிகளின் அடிப்படையில் சொத்து வரி கணக்கிடப்படுகின்றன. அவை:
- மொத்த கட்டிட அடிப்பகுதி
- அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத கட்டிடப் பகுதி
- ஒரு சதுர அடிக்கு வாடகை / மாதாந்திர வாடகை மதிப்பு (MRV)
- கட்டிட வகை – குடியிருப்பு அல்லது வணிக கட்டிடம்
- கட்டிடப் பயன்படாடு (ஒரு சதுர அடிக்கு)
- சொத்து அமைந்திருக்கும் இடம்
- சொத்தின் வயது
- நகராட்சி வார்டு
- ஒரு சதுர அடிக்கு விலை விகிதம்
- தேய்மானம்
ஒரு சதுர அடிக்கான விலை விகிதம் (சொத்து அமைந்துள்ள மண்டலத்தின் அடிப்படையில்), தேய்மானம் ஆகியவை கோவை மாநகராட்சி இணயதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
இதையும் வாசிக்க: 2021-ல் தமிழ்நாட்டின் முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணங்கள்
கோவையில் நேரடி முறையில் சொத்து வரி செலுத்துவது எப்படி?
கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கோவையில் உள்ள சொத்து வரியை குடிமக்கள் நேரடியாக செலுத்தலாம். சொத்து வரிக்கான பணத்தை அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இ-சேவை மையங்களிலும் செலுத்தலாம். சொத்தின் உரிமையாளர்கள், பணம் செலுத்தும் காலத்திற்கான சொத்து வரி விவரப் பட்டியலை பெற்று, சுய மதிப்பீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து, சொத்து வரி செலுத்துவதற்கான கவுன்டரில் பணம் செலுத்த வேண்டும்.
கோயம்புத்தூர் சொத்து வரி: ஆன்லைனில் பெயரை மாற்றுவது எப்படி?
கோவை மாநகராட்சி இணையதளத்தில், குடிமக்கள் சொத்து வரியில் தங்களின் பெயரை மாற்றுவதற்கும் விண்ணப்பிக்க முடியும். உரிய ஆவணங்களுடன் மாநகராட்சியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் வார்டு அலுவலகங்களில் உள்ள தகவல் மையத்தில் கிடைக்கும்.
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள்
- சொத்தின் உரிமை தொடர்புடைய ஆவணங்கள்
- முந்தைய உரிமையாளர் இறந்திருந்தால் அவரின் இறப்புச் சான்றிதழ்
- முந்தைய உரிமையாளரின் வாரிசு என்பதற்கான சட்டபூர்வ வாரிசு சான்றிதழ்
- புதுப்பித்த வரி செலுத்திய ரசீது நகல்
கோவையில் சொத்து வரி செலுத்தும் மையங்கள்
கோயம்புத்தூர் குடிமக்களுக்கு ஆன்லைன் மூலமாக வீட்டு வரி செலுத்தும் வசதியை கோவை மாநகராட்சி இணையதளம் வழங்குகிறது. சொத்து உரிமையாளர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சியின் இணையதளத்திற்குச் சென்று, சொத்து வரி செலுத்தும் ஆன்லைன் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தொடர்புடைய விவரங்களை அளித்து தங்களுடைய வரியை செலுத்தலாம். வரி செலுத்துபவர், சொத்து வரியை வங்கி, கூகுள் பே போன்ற அவர்களுக்கு விருப்பமான பணம் செலுத்தும் முறையில் ஆன்லைனில் செலுத்தலாம்.
மேலும், கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை நேரடியாக சென்று ஆஃப்லைன் முறையில் செலுத்த விரும்புகிறவர்கள், மாநகராட்சி அலுவலகம் அல்லது மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட வங்கிகளுக்குச் சென்று செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட வங்கிகளின் விவரம்:
- சிட்டி யூனியன் வங்கி
- கனரா வங்கி
- ஹெச்டிஎஃப்சி வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- ஐடிபிஐ வங்கி
- கரூர் வைஸ்யா வங்கி
- கோடக் மஹிந்திரா வங்கி
- லக்ஷ்மி விலாஸ் வங்கி
- தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
கோவை மாநகராட்சி குடிநீர் வரி
கோயம்புத்தூர் மாநகராட்சியில் வசிப்பவர்களுக்கு ஆன்லைனில் சொத்து வரி செலுத்துவதற்கு வசதி செய்து தரும் மாநகராட்சியின் அதிகாரபூர்வ CCMC இணையதளம், தண்ணீர் வரி செலுத்தும் வசதியையும் கோவை வாசிகளுக்கு வழங்குகிறது. குடிமக்கள் இணையதளத்தில் உள்நுழைந்து ஆன்லைனில் குடிநீர் வரியையும் செலுத்தலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
சொத்து வரி செலுத்திய ரசீதை எப்படி பதிவிறக்கம் செய்வது?
இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளபடி, கோயம்புத்தூர் சொத்து வரி ரசீதை கோவை மாநகராட்சியின் CCMC வலைதளத்தில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய பின்னர், உங்களுக்கு அதற்கான ரசீது திரையில் வரும். அந்த ரசீதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரின்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
கோவையில் சொத்து வரி செலுத்த கடைசி நாள் என்ன?
கோவையில் ஒரு நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கான பொதுவான காலக்கெடு மார்ச் 31, செப்டம்பர் 31 ஆகியவை ஆகும்.