புதிய வீடு வாங்கும்போதோ அல்லது வாடகை வீடு மாறும்போதோ இருக்கும் பல முக்கியமான வேலைகளில் ஒன்றுதான் கேஸ் இணைப்பு பெறுவது. புதிய நகரத்தில் குடிபெயரும்போதோ அல்லது இருக்கின்ற நகரத்திலேயே ஒரு ஏரியாவில் இருந்து இன்னொரு ஏரியாவிற்கு மாறும்போதோ புதிய இணைப்பு அல்லது ஏற்கெனவே இருக்கின்ற இணைப்பை ஒரு கேஸ் ஏஜென்சியில் இருந்து மாற்றொரு கேஸ் ஏஜென்சிக்கு எப்படி மாற்றுவது என்ற நடைமுறையை அனைவரும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். புதிய கேஸ் இணைப்பு பெறுவதற்கு இருக்கும் வாய்ப்புகளில் இண்டேன் கேஸ் புதிய இணைப்பு (Indane gas new connection) பெறுவதும் ஒன்று. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் நடத்தப்படும் இண்டேன் கேஸ் நிறுவனம் உலக அளவில் உள்ள மிகப் பெரிய எல்பிஜி கேஸ் நிறுவனங்களில் ஒன்று. ஒரு வாடிக்கையாளராக, புதிய கேஸ் இணைப்புக்கான விலை மற்றும் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை நீங்கள் அறிய வேண்டியது அவசியம்.
எல்பிஜி இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் புதிய கேஸ் இணைப்பு பெறுவதற்கான வசதியை இந்திய அரசு தனது குடிமக்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. இதன்மூலம் சிலிண்டர் விலை மற்றும் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கேஸ் விநியோகஸ்தரின் முகவரி உள்ளிட்ட பல தகவல்களையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
விரிவான வழிகாட்டுதல்கள் இங்கே.
இண்டேன் கேஸ் புதிய இணைப்பு விலை
நகரம் | 14.2 கிலோ சிலிண்டருக்கான விலை (ரூபாயில்) |
டெல்லி | 834.50 |
மும்பை | 834.50 |
கொல்கத்தா | 861 |
சென்னை | 850.50 |
*மாநில/மாவட்ட அதிகாரிகளால் அளிக்கப்பட்ட அறிவிக்கையின்படி, ஜூன் 1, 2021-ல் இருந்து அமல்படுத்தப்பட்ட விலை.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை மெட்ரோ நகரங்களில் கிடைக்கக் கூடிய மானியம் இல்லாத இண்டேன் கேஸ் சிலிண்டரின் விலை. புதிய எல்பிஜி கேஸ் இணைப்பிற்கான விலை என்பது நகரம், நீங்கள் குடியிருக்கும் பகுதிக்கு ஏற்ப மாறுபடலாம்.
நீங்கள் புதிய இண்டேன் கேஸ் இணைப்பு பெற விரும்புகிறீர்கள் என்றால், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1,450. திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதியுள்ள இந்தத் தொகை வடகிழக்கு மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். வடகிழக்கு மாநிலங்களில் புதிய இணைப்புக்கான விலை ரூ.1,150. அதேபோல, 5 கிலோ எடையுள்ள புதிய கேஸ் இணைப்புக்கான முன்வைப்புத் தொகை ரூ.800 ஆகும். 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டருக்கான முன்வைப்புத் தொகை ரூ.1,700 ஆகும். நீங்கள் ஒரு கேஸ் அடுப்புடன் கூடிய புதிய கேஸ் இணைப்பை பெறும்போது அதற்கான விலையை ஆன்லைனிலேயே செலுத்த முடியும்.
புதிய இண்டேன் கேஸ் இணைப்பு பெறும்போது வழங்கப்படும் ரெகுலேட்டருக்காக ரூ.150 வசூலிக்கப்படும். இந்தத் தொகையை நாம் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல பாஸ்புக்கிற்காக ரூ.25 வசூலிக்கப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு இந்திய அரசு மானியமும் வழங்குகிறது. இந்தத் தொகையானது நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடும்.
புதிய இண்டேன் கேஸ் இணைப்பு: ஆன்லைன் மூலம் புதிய கேஸ் இணைப்பு பெறுவது எப்படி?
முதலில், உங்களது இருப்பிடத்திற்கு அருகில் எல்பிஜி சிலிண்டர் வழங்கும் கேஸ் ஏஜென்சி எது என்பதை ஆன்மூலமாக தெரிந்துகொள்ள வேண்டும். அந்த எல்பிஜி சிலிண்டர் விநியோக அலுவலகம் எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர் சேவை எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக புதிய இண்டேன் கேஸ் இணைப்பைப் பெறுவதற்கு எல்பிஜி கேஸ் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று, அதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி புதிய இணைப்புக்கு முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் கேஓய்சி (KYC) படிவத்தை உரிய தகவல்களுடன் நிரப்பி முதன்மைத் தொகையை செலுத்த வேண்டும். புதிய இணைப்பிற்காக வாடிக்கையாளர் பதிவு செய்த பின்னர் பதிவு செய்த தேதி, பதிவு எண் ஆகியவற்றுடன் ரசீது ஒன்றை கேஸ் ஏஜென்சி வழங்கும். முன்பதிவு எண் கிடைக்கப் பெற்றதும், அந்த ரசீதைக் காண்பித்து ரெகுலேட்டர் மற்றும் சிலிண்டருக்கான பணம் செலுத்த வேண்டும்.
கடந்த 2015-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் இந்தியன் ஆயில் நிறுவனம், டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி மற்றும் SAHAJ (e-SV) வசதியை வழங்குகிறது. SAHAJ என்பது வாடிக்கையாளரிடம் உள்ள ரெகுலேட்டர் மற்றும் சிலிண்டரின் விவரங்கள் அடங்கிய இ-சப்ஸ்கிரிப்ஷன் ரசீது ஆகும்.
மேலும் தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புக்காக TNEB ஆன்லைனில் விண்ணப்பித்தல் குறித்து வாசிக்கவும்
இந்தியாவில் கிடைக்கும் சமையல் எரிவாயு இணைப்புகளின் வகைகள்
உள்நாட்டு பிஎன்ஜி (PNG – குழாய்வழி இயற்கை எரிவாயு) இணைப்பு
வீட்டு உபயோகத்துக்கான பிஎன்ஜி இணைப்பில், வீடுகளுக்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு என்பது ஒரு குழாய் மூலமாக அனுப்பப்படும். இவ்வாறு வழங்கப்படும் எரிவாயு பெருமளவில் மீத்தேனையும், குறிப்பிட்ட அளவில் இன்ன பிற உயர் ஹைட்ரோகார்பனையும் கொண்டதாக இருக்கும். இந்த வழிமுறை மிகவும் பாதுகாப்பானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த வழிமுறையில் வீடுகளில் எரிவாயுவை சேமித்து வைக்கும் வசதி இருப்பதில்லை.
எல்பிஜி (LPG – திரவ பெட்ரோலிய எரிவாயு) இணைப்பு
எல்பிஜி என்படும் திரவ பெட்ரோலிய எரிவாயு என்பது பெட்ரோலிய வாயுக்களான புரொப்பேன், பியூட்டேனையோ, இந்த இரண்டின் கலவையையோ குறிக்கிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமானதும், அதிக பயன்பாட்டில் உள்ளதுமான எல்பிஜி எரிவாயு, சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் எல்பிஜி கேஸ் இணைப்பு பொதுத் துறை மற்றும் தனியார் துறையினரால் விநியோகிக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட பொதுத்துறை நிறுவன விநியோகிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிலிண்டர்களை மானிய விலையில் பெற முடியும்:
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்தின் இண்டேன் கேஸ்
- ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்தின் ஹெச்பி கேஸ்
- பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் நிறுவனத்தின் பாரத் கேஸ்
பிரபல தனியார் துறை எல்பிஜி விநியோகிப்பாளர்கள் விவரம்:
- சூப்பர் கேஸ்
- ஈஸ்ட் கேஸ்
- ஜோதி கேஸ்
- டோடல்கேஸ்
பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் துறை கேஸ் ஏஜென்சிகள் 14.2 கிலோ மற்றும் 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களையே விநியோகிக்கின்றன. எனினும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கேஸ் இணைப்புகளின் அளவுகளில் மாறுபாடுகள் உண்டு.
இண்டேன் புதிய கேஸ் இணைப்பு: அருகமை இண்டேன் கேஸ் விநியோகிப்பாளரை கண்டறிவது எப்படி?
இண்டேன் கேஸ் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்புகொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கேஸ் விநியோகிப்பாளர் குறித்து அறிந்து கொள்ளலாம்.
அதேபோல இண்டேன் ஆன்லைன் வலைதளம் மூலம் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி விநியோகிப்பாளரைக் கண்டறியலாம்.
படி 1: இண்டேனின் அதிகாரபூர்வ வலைதளத்தின் முகப்பு பக்கத்திற்குச் சென்று ‘Locate us’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 2: அது உங்களை மற்றொரு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அதில் ‘our network’ என்பதற்கு கீழுள்ள ‘Indane distributor’ என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் உங்கள் பகுதி, பின் கோடு, இருப்பிடம் போன்ற விபரங்களை பதிவு செய்து, அதன் பின்னர் ‘show’என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
இதனைத் தொடர்ந்து உங்கள் அருகில் இருக்கும் விநியோகஸ்தர்களின் தொடர்பு விபரங்கள் மற்றும் முகவரி முதலானவை திரையில் தெரியும்.
இண்டேன் கேஸ் புதிய இணைப்பு: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள்
படி 1: முதலில் எல்பிஜி அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
படி 2: உங்கள் LPG ID-ஐ அறிந்து கொள்வதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். பின்னர் நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுங்கள். அதன்பின் நீங்கள் https://cx.indianoil.in/webcenter/portal/LPG/pages_findyourlpgid என்ற பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
படி3: இப்போது நீங்கள் புதிய இணைப்பை பெறுவதற்கான ‘Register for New Connection’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அது உங்களை புதிய இணைப்பு பெறுவதற்காக SAHAJ ஆன்லைன் பக்கமான https://cx.indianoil.in/webcenter/portal/LPG/pages_lpgservicenewconnection இதற்கு அழைத்துச் செல்லும். அதில் நீங்கள் ‘Register for a online New Connection’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 4: ‘Register Now’ மீது க்ளிக் செய்க.
படி 5: பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்த பின்னர் ‘Proceed’ பட்டனை அழுத்துங்கள்.
படி 6: இப்போது நீங்கள் பதிவுசெய்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி எண் வரும். அதனை பதிவு செய்த பின்னர் ‘Verify’ என்பதை க்ளிக் செய்யுங்கள். அதன்பின் உங்களது பாஸ்வேர்டை செட் செய்யுமாறு கேட்கப்படும்.
படி 7: மேலும் நீங்கள் தொடர்வதற்கு உங்களது யூசர் நேம், பாஸ்வேர்டை பதிவு செய்து, அடுத்த நடைமுறைக்குச் செல்ல வேண்டும்.
படி 8: இப்போது வரும் முதன்மைப் பக்கத்தில், புதிய இண்டேன் கேஸ் இணைப்பு பெறுவதற்கு ‘Submit KYC’ என்பதில் சமர்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களான பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, தேசிய இனம், தொடர்பு முகவரி முதலானவற்றைப் பதிவு செய்யவேண்டும். அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் பட்டியலில் இருந்து விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர், ‘Select the products’ என்பதன் கீழுள்ள உங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, நீங்கள் மானியத்தில் சிலிண்டர் பெறுகிறீர்களா அல்லது மானியம் இல்லாமல் சிலிண்டர் பெறுகிறீர்களா என என்ன வகையான சிலிண்டர் வேண்டும் என்பதை பதிவு செய்து சமர்பிக்க வேண்டும். பின்னர், அந்தப் படிவ பக்கத்தில் இருக்கும் ‘Save and Continue என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 9: முகவரிச் சான்று, அடையாளச் சான்று முதலான தேவையான ஆவணங்களை அளித்து, தேவையான தகவல்களைப் பதிவு செய்த பின்னர், அதில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகளை ஏற்றுகொண்டு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுடைய படிவமானது விநியோகஸ்தருக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களுடைய புதிய இணைப்புக்கான தற்போதைய நிலையை நீங்கள் இணையத்தில் அறியலாம். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அடையாளச் சான்று, உங்களுடைய புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களுடன் விநியோகஸ்தரைச் சந்தித்து குறிப்பிட்ட கட்டணங்களை செலுத்த வேண்டும். அதற்கு முன்பாக, இண்டேன் புதிய கேஸ் இணைப்புக்கான விலையை தெரிந்துவைத்துக் கொள்வது அவசியம்.
ஆஃப்லைன் மூலமாக புதிய கேஸ் இணைப்பு பெறுவது எப்படி?
- ஆப்லைன் மூலமாக, அதாவது நேரடியாகச் சென்று புதிய இண்டேன் கேஸ் இணைப்பு பெறுவதற்கு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இண்டேன் கேஸ் ஏஜென்சிக்கு செல்ல வேண்டும்.
- புதிய வாடிக்கையாளராக உங்களை இணைத்துக் கொள்வதற்கு அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து தரவேண்டும்.
- முகவரி சான்று, அடையாளச் சான்று, புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களைச் சேர்த்து தரவேண்டும்.
- உங்களுடைய முன்பதிவு நடைமுறை முடிவடைந்ததும், அந்த ஏஜென்சி முன்பதிவு தேதி மற்றும் முன்பதிவு எண்ணுடன் ரசீது ஒன்றை வழங்கும்.
- பதிவு எண் கிடைத்ததும், உங்களுக்கு தேவையான இண்டேன் புதிய கேஸ் இணைப்புக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
அதன் பின்னர் அந்த விநியோகஸ்தர் உங்களுடைய வீட்டிற்கு வந்து உங்களிடம் இருக்கும் அடுப்பின் தரத்தை சோதித்து ஆய்வு செய்த பின்னர் உங்களுக்கு புதிய கேஸ் இணைப்பு வழங்கப்படும்.
இண்டேன் புதிய கேஸ் இணைப்பு: தேவையான ஆவணங்கள்
புதிய கேஸ் இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பிக்க கீழ்கண்ட ஆவணங்கள் தேவைப்படும்:
அடையாளச் சான்று (கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒன்று)
- ஆதார் அட்டை
- பான் அட்டை
- பாஸ்போர்ட்
- வாக்காளர் அடையாள அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
- புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம்
முகவரிச் சான்று (கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒன்று)
- ஆதார் அட்டை
- குத்தகை ஒப்பந்தம்
- வாக்காளர் அடையாள அட்டை
- வீட்டின் பதிவு ஆவணம்
- ப்ளாட் ஒதுக்கீடு அல்லது உரிமைக் கடிதம்
- ஓட்டுநர் உரிமம்
- சமீபத்திய மூன்று மாதங்களுக்கான தொலைபேசி, தண்ணீர், மின் கட்டணத்தின் ரசீது
- குடும்ப அட்டை
- பாஸ்போர்ட்
- கெஸட்டட் அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட சுய பிரமாணம்
- வங்கி அல்லது கடன் அட்டை அறிக்கை
- எல்ஐசி பாலிசி
கேஒய்சி படிவம்
குடும்பத்தில் எல்பிஜி அல்லது பிஎன்ஜி இணைப்பு இல்லை என்பதற்கான உறுதிமொழிப் பத்திரம்
புதிய கேஸ் இணைப்பிற்குப் பின் பெறும் ஆவணங்கள்
நீங்கள் முதல் முறையாக இண்டேன் வீட்டு உபயோக கேஸ் இணைப்பிற்கு விண்ணப்பித்து பெற்றிருந்தால், புதிய இணைப்பு இன்ஸ்டால் செய்வதன் ஒரு பகுதியாக ஒரு எல்பிஜி சிலிண்டர், ரெகுலேட்டர், ஒரு ரப்பர் குழாய் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.
வைப்புத் தொகை செலுத்திய பின்னர் வாடிக்கையாளர் தங்களது பாஸ்புக்கைப் பெறுவார் (இது வீட்டு உபயோக வாடிக்கையாளர் கேஸ் அட்டை அல்லது ப்ளூ புக் என்றும் அறியப்படுகிறது). அதில் இணைப்பு விபரம் மற்றும் இன்ன பிற விபரங்கள் சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியரால் பதிவு செய்யப்படும். சந்தாவுக்கான ரசீது அல்லது இணைப்பு பெற்றதற்கான சான்றும் வழங்கப்படும். இந்தச் சான்று ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
யாரெல்லாம் புதிய கேஸ் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்?
- 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து கேஸ் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
- புதிய கேஸ் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஏற்கெனவே எல்பிஜி இணைப்பு வைத்திருக்கக் கூடாது.
இண்டேன் கேஸ் சிலிண்டரை ரீஃபில் செய்வதற்கான நடைமுறை
ஒருவர் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து சில வாரங்களுக்கோ, ஒரு மாதத்திற்கோ மட்டும் புதிய எல்பிஜி சிலிண்டர் வரலாம். அதன் பின்னர் நாம் புதிய சிலிண்டர் வாங்க வேண்டும். இணைய வசதியுள்ள கணினி, மொபைலின் வாடஸ்அப், எஸ்எம்எஸ் அல்லது வாடிக்கையாளர் மையத்தை அழைப்பதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கான இண்டேன் கேஸ் இணைப்பை புதுப்பிக்கலாம்.
வாட்ஸ்அப் மூலமாக: வாட்ஸ்அப் வழியே கேஸ் சிலிண்டரை ரீஃபில் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் 75888 88824 என்ற எண்ணிற்கு ‘REFILL’ என டைப் செய்து அனுப்ப வேண்டும். இண்டேன் மையத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்தே இதனை அனுப்ப வேண்டும். பதிவு செய்த சிலிண்டரின் ஸ்டேடஸ் குறித்து அறிந்து கொள்ள STATUS# என டைப் செய்து, அதோடு ஆர்டர் நம்பரையும் இணைத்து 75888 88824 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
அழைப்பு மூலமாக: இண்டேன் கேஸ் பதிவு செய்வதற்கான எண் 771895 5555. மொபைல் போனில் இருந்து அந்த நகரத்திற்கான எஸ்டிடி கோட் எண்ணுடன் கூடிய இண்டேன் கேஸ் வினியோகஸ்தரின் தொடர்பு எண் மற்றும் வாடிக்கையாளர் பதிவு எண் ஆகியவற்றை அழைத்து தெரிவிக்க வேண்டும். சிலிண்டர் புதுப்பித்தலுக்கான பதிவு உறுதி செய்யப்பட்டதற்கான தகவல், பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு எஸ்எம்எஸ் வழியே அனுப்பப்படும்.
எஸ்எம்எஸ் மூலமாக: எஸ்எம்எஸ் வழியே இண்டேன் கேஸ் சிலிண்டரை புதுப்பிக்க REFILL என டைப் செய்து 75888 88824 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
மொபைல் அப் மூலமாக:
- பிளே ஸ்டோர் சென்று IndianOil ONE App என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- Install பட்டனை அழுத்தி அந்த செயலியை மொபைல் போனில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். இந்தியன் ஆயில் இணையதளத்திற்குச் சென்றும் IndianOil ONE App-ஐ டவுன்லோடு செய்துகொள்ளலாம். இதற்காக இந்தியன் ஆயில் வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் Download the Free Mobile App என்ற லிங்கை க்ளிக் வேண்டும்.
- அடுத்த பக்கத்தில் உள்ள Install ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பதிவு செய்துகொண்ட பின்னர் பயனாளர்கள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் லாகின் செய்துகொள்ளலாம்.
புதிதாக கணக்கு தொடங்கும் பயனாளர்கள் தேவையானச் சான்றுகளை சமர்பித்து புதிய கணக்கை உருவாக்கலாம். முகப்பு பக்கத்தில் உள்ள Order Cylinder என்பதை க்ளிக் செய்து தகவல்களை உறுதி செய்துகொள்ள வேண்டும். அடுத்ததாக Order Now என்பதை க்ளிக் செய்ததும் பதிவு செய்ததற்கான எண், உறுதி செய்யப்பட்ட எஸ்எம்எஸ் உங்களது அலைபேசிக்கு அனுப்பப்படும்.
இண்டேன் கேஸ் புதிய இணைப்பை டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?
மற்ற மூன்று பொதுத் துறை கேஸ் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளே இண்டேன் கேஸின் புதிய இணைப்பை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது அனைத்து வழிமுறைகளும் ஒன்றுதான்.
நகரத்துக்குள் மாற்றுவதற்கான வழிமுறைகள்:
- முதலில் பழைய விநியோகஸ்தரிடமிருந்து கேஸ் இணைப்பை மாற்றுவதற்கான இ-சிடிஏ (e-CTA) எனப்படும் இ-கஸ்டமர் டிரான்ஸ்ஃபர் அட்வைஸ் சான்றைப் பெறவேண்டும். இதுபோலவே எஸ்வி (SV) எனப்படும் சந்தா ரசீதுக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்று பெறவேண்டும். இது வழங்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்கள் வரை செல்லுபடியாகும்.
- அந்த ரசீதை அதே கேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த புதிய விநியோகஸ்தரிடம் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் உங்களை புதிய வாடிக்கையாளராக ஏற்றுக்கொள்வார்.
வேறு நகரங்களுக்கு மாற்றுவதற்கான வழிமுறைகள்:
- முதலாவதாக தற்போது இருக்கும் நகரத்தின் விநியோகஸ்தர், அந்த இடத்திலிருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டுவிட்டது என்பதற்கான டெர்மினேஷன் ரசீது (TV) ஒன்றைத் தருவார். அத்துடன் வாடிக்கையாளர் சந்தா ரசீதில் சொல்லப்பட்டிருக்கும் திருப்பிச் செலுத்தும் வகையிலான தொகையை அவர்கள் திருப்பத் தருவார்கள். இந்த டெர்மினேஷன் ரசீதின் செல்லுபடி காலம் ஓராண்டு ஆகும்.
- அடுத்ததாக உங்களிடம் உள்ள சிலிண்டர், ரெகுலேட்டர்களை விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்.
- மாற்றலாகிச் செல்லும் நகரத்திலும் உங்களிடம் உள்ள பழைய வீட்டு உபயோக கேஸ் கன்ஸ்யூமர் கார்டையே பயன்படுத்த முடியும். புதிய விநியோகஸ்தர் அதனை அங்கீகரித்தப் பின் நீங்கள் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
- புதிய இணைப்புக்கு டெர்மினேஷன் ரசீதில் குறிப்பிட்டிருக்கும் வைப்புத் தொகைகளை செலுத்தி புதிய சந்தாவுக்கான ரசீது (SV)பெற்றுக்கொள்ள வேண்டும்.
- உங்களுக்கான பதிவு நடைமுறைகள் முடிந்த பின்னர், நீங்கள் வைப்புத்தொகையை செலுத்தியப் பின்பு, உங்களுக்கான சிலிண்டரும், ரெகுலேட்டரும் வழங்கப்படும்.
ஒரு கேஸ் ஏஜென்சியில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றும் வழிமுறைகள்
- கேஸ் நிறுவனங்களின் இணையதளத்திற்குச் சென்று புதிதாக செல்ல இருக்கின்ற நகரத்தில் உள்ள கேஸ் விநியோகஸ்தர்களின் விபரங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
- அடுத்ததாக ஏற்கெனவே உள்ள விநியோகஸ்தரிடம் நீ்ங்கள் இடம் மாறிச் செல்லும் தகவலைக் கூறி, அவர்களிடம் உங்களுடைய கேஸ் இணைப்பை மாற்றம் செய்வதற்கான கடிதம் வழங்க வேண்டும்.
- அதனோடு, உங்களிடம் உள்ள சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர்களை ஒப்படைக்க வேண்டும்.
- அதன் பின்னர் சந்தா ரசீதில் குறிப்பிட்டுள்ள வைப்புத் தொகை உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
- அதனைத் தொடர்ந்து பழைய கேஸ் விநியோகஸ்தர் உங்களுக்கு கேஸ் இணைப்பு மாற்றத்திற்கான கேஸ் டிரான்ஸ்ஃபர் ரசீதை வழங்குவார்.
- புதிய இண்டேன் கேஸ் இணைப்பு பெறுவதற்கு, தகுந்த முகவரிச் சான்று, அடையாளாச் சான்றுகளுடன் கேஸ் டிரான்ஸ்ஃபர் ரசீதையும் வழங்க வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து தேவையான பரிமாற்றக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இந்த தொகை ஒவ்வொரு கேஸ் ஏஜென்சிக்கும் மாறுபடலாம்.
- அனைத்து சான்றுகளும், ஆவணங்களும் கொடுக்கப்பட்ட பின்பு, புதிய கேஸ் நிறுவனம் உங்களுடைய மாற்றத்தினை உறுதி செய்யும். பின்னர் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புதிய முகவரிக்கு இணைப்பு ரசீது வழங்கும்.
- அதன் பிறகு நீங்கள் புதிய சிலிண்டருக்கு பதிவு செய்யலாம். சில நாட்களில் உங்களுடைய புதிய முகவரிக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
எல்பிஜி கேஸ் மானியத்தின் நிலையை தெரிந்துகொள்வது எப்படி?
இந்திய அரசு எல்பிஜி கேஸிற்கு மானியம் வழங்குகிறது. இது குறைந்த விலையில் இண்டேன் கேஸ் பெற மக்களுக்கு உதவுகிறது. வாடிக்கையாளர்கள் எல்பிஜியின் இணையதளத்தில் எல்பிஜி மானியத்தின் நிலையினை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
- முதலில் எல்பிஜி அதிகாரபூர்வ இணையதளம் செல்ல வேண்டும்
- ‘Click to Give Up LPG Subsidy Online’ இணைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- எல்பிஜி நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
- இப்போது நீங்கள் புதிய பக்கத்திற்கு வந்திருப்பீர்கள். அதில் உங்களுடைய எல்பிஜி எண், வங்கி விவரங்கள் ஐஎப்எஸ்சி எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் கேப்ச்சா கோடு பதிய வேண்டும். அதன்பின் ‘continue’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து உங்களுடைய யூசர் ஐடி, பாஸ்வேர்டை பதிந்து உள்நுழைய வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து ‘View Cylinder Booking History’ மீது க்ளிக் செய்ய வேண்டும்.
- இப்போது நீங்கள் எல்பிஜி பேமென்ட் மற்றும் மானியம் குறித்து அறிந்துகொள்ள முடியும்.
பொது இண்டேன் கேஸ் புக்கிங் நம்பர் என்றால் என்ன?
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள், எல்பிஜி கேஸ் புக்கிங்கிற்காக 7718955555 என்ற எண்ணை இண்டேன் கேஸ் உருவாக்கியுள்ளது. இந்த எண்ணில் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பதிவு செய்ய முடியும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து இந்தப் பொது எண்ணில் சிலிண்டர் பதிவு செய்ய முடியும்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த எண் நாடு முழுவதும் 24 மணிநேரமும் எல்லா நாட்களிலும் பயன்பாட்டில் இருக்கும்.
இண்டேன் கேஸ் பதிவேட்டில் வாடிக்கையாளரின் எண் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தால், IVRS, 16 இலக்க வாடிக்கையாளர் அடையாள எண்ணை அடையாளம் கண்டு, வாடிக்கையாளரிடமிருந்து உறுதிப்படுத்தும் தகவல் வந்த பின்னர், சிலிண்டருக்கான பதிவை ஏற்றுக்கொள்ளும்.
ஆன்லைன் இண்டேன் கேஸ் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், வாடிக்கையாளர் 16 இலக்க அடையாள எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்த பின்னர் கேஸ் சிலிண்டர் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும்.
வாடிக்கையாளரின் 16 இலக்க அடையாள எண், ரசீது, கேஷ் மெமோ, சந்தா ரசீது ஆகியவைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இண்டேன் கேஸ் பதிவு எண் வசதி, பிஹார், குஜராத், டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது.
இண்டேன் கேஸ் புதிய இணைப்பு: சமீபத்திய செய்தி
நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆதார் அட்டை மற்றும் இருப்பிடச் சான்று இல்லாமல் புதிய இண்டேன் கேஸ் சிலிண்டரைப் பெறலாம் என்று சமீபத்தில் அறிவித்துள்ளது. அருகிலுள்ள விநியோகஸ்தர்களை அணுகி வாடிக்கையாளகர்கள் 5 கிலோ எல்பிஜி சிலிண்டரைப் பெற முடியும்.
இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய வகை சிலிண்டர் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. “இண்டேன் கம்போசிட் சிலிண்டர்” என அறியப்படும் இந்த சிலிண்டர் மூலம் எவ்வளவு கேஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது, இன்னும் எவ்வளவு கேஸ் மீதமுள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள முடியும்.
வீட்டில் விநியோகிக்கப்படும் எல்பிஜி சிலிண்டருக்கான புதிய ஓடிபி முறை அறிமுகம்
கடந்த 2020 நவம்பர் 1-ம் தேதி முதல் வீட்டில் வந்து விநியோகிக்கப்படும் சிலிண்டர்களைப் பெற ஓடிபி என்படும் ஒருமுறை பயன்படும் பாரஸ்வேர்டை சிலிண்டர் விநியோகிக்க வருபவரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் டிஏசி என்னும் புதிய டெலிவரி ஆத்தென்டிகேஷன் கோடு முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் சிலிண்டருக்காக பதிவு செய்யும்போது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி எண் அனுப்பி வைக்கப்படும். சிலிண்டர் வழங்க வரும்போது அந்த ஓடிபி எண்ணை நிறுவனத்தின் ஊழியரிடம் வாடிக்கையாளர் செல்ல வேண்டும். எல்பிஜி சிலிண்டர்கள் திருடப்படுவதைத் தடுப்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. ஒருவேளை வாடிக்கையாளரின் மொபைல் எண் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் நபர் டெலிவிரி செய்யும் நேரத்தின் அடிப்படையில் ஒரு விண்ணப்பத்தின் மூலமாக அப்டேட் செய்ய முடியும்.
இந்த நடைமுறை 100 ஸ்மார்ட் நகரங்களில் நடைமுறையில் உள்ளது. இதன் பரிசோதனை முயற்சி ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் தொடங்கப்பட்டது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
நாம் இரண்டு கேஸ் இணைப்புகள் வைத்திருக்க முடியுமா?
ஒரு குடும்பத்திற்கு ஒரு எல்பிஜி கே்ஸ் இணைப்பு மட்டுமே வைத்திருக்க அனுமதி உண்டு. புதிய இண்டேன் கேஸ் இணைப்பு பெறுதற்கு முன்பு, பழைய கேஸ் இணைப்பை பழைய நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
புதிய இண்டேன் கேஸ் இணைப்பு பெற எவ்வளவு நாட்களாகும்?
புதிய இண்டேன் கேஸ் இணைப்பிற்கு விண்ணப்பித்து, நடைமுறைகள் முடிந்து கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு ஒரு வார காலம் ஆகலாம். நீங்கள் புதிய கேஸ் இணைப்பிற்கு விண்ணப்பித்த பின்னர், அந்த விநியோக நிறுவனம் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் சிலிண்டர், ரெகுலேட்டர், ரப்பர் டியூபை வழங்கும்.
ஒரு மாதத்தில் இரண்டு சிலிண்டர்கள் புக் செய்ய முடியுமா?
முடியும். ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்தில் இரண்டு எல்பிஜி சிலிண்டர் புக் செய்ய முடியும்.
யாருக்கெல்லாம் எல்பிஜி மானியம் கிடைக்கும்?
ஏழை, எளிய மக்கள் எல்பிஜி மானியம் பெற முடியும். இதற்காக இந்திய அரசு குறிப்பிட்ட வருமானத்தை அளவீடாக வைத்துள்ளது. அரசின் வழிகாட்டுதல் படி, ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்கள் எல்பிஜி மானியம் பெற முடியாது.
இண்டேன் கேஸ் டெலிவரி இலவசமா?
ஒவ்வொரு இண்டேன் கேஸ் டெலிவரிக்கும் நாள் மற்றும் நேரத்தைப் பொறுத்து குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுகிறது.