துளசி மாடம் வைக்கும் திசை: உங்கள் வீட்டுக்கான துளசி செடி வாஸ்து சாஸ்திர குறிப்புகள்

துளசி செடி அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. பருவ மழைக் காலங்களில் ஏற்படும் சளி, இருமல் முதலானவற்றைக் குணப்படுத்துகிறது. இந்தச் செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கான வாஸ்து சாஸ்திர விதிகளை இங்கு பார்க்கலாம்.

மூலிகைகளின் ராணியாக அறியப்படுகிற துளசி (tulsi) செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது, இந்தியாவில் இந்து  மக்கள் பலரது வீடுகளில் புனிதமான செடியாகக் கருதப்பட்டு வளர்க்கப்படுகிறது. மேலும், பேசில் (basil) என்றும் அழைக்கப்படும்  இந்த மூலிகைச் செடி பருவ மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களான சாதாரண சளி, காய்ச்சல் மற்றும் இருமலை குணப்படுத்தும்  வல்லமை கொண்டது. மேலும், வாஸ்து சாஸ்திரத்தின்படி துளசி செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதால் வீட்டில் நல்லிணக்கமும்,  குடும்பத்தாரிடையே மகிழ்ச்சியும் ஏற்படும்.

எனவே, துளசி செடியை வீட்டில் எந்த இடத்தில் வைப்பது? உங்களது வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் விதமாக புனித துளசியை  வைப்பதற்கான வாஸ்து வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 

துளசி செடி வாஸ்து

துளசி அல்லது புனித துளசி என்பது பூக்கும் செடியாகும். இது புதினா குடும்ப வகையைச் சேர்ந்தது. இந்திய துணைக் கண்டத்தில்  தோன்றியது. இது ஒரு மீட்டர் உயரத்திற்கு தொடர்ச்சியாக புதர் போன்று வளரும். நல்ல மணம் கொண்ட பச்சை அல்லது ஊதா நிற  இலைகளைக் கொண்டிருக்கும். இந்தத் தாவரத்தின் பழங்களில் ஏராளமான விதைகள் இருக்கும்.

இந்து மதத்தில் துளசி செடியானது லக்‌ஷ்மி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது. எனவே, இதனை இந்து மக்கள் வணங்கி  போற்றுகின்றனர். ஆகவே, பல இந்திய வீடுகளிலும் துளசி செடி புனிதமாகக் கருதப்பட்டு வளர்க்கப்படுகிறது. பொதுவாக, மக்கள் இந்தச்  செடியை நான்கு பக்க சிமென்ட் வைத்து கட்டப்பட்ட மேடை போன்ற அமைப்பில் வளர்ப்பார்கள். இதனை துளசி மாடம் என்று  அழைப்பார்கள். இந்த அதிர்ஷ்டமான செடியை வீட்டில் வளர்ப்பதால், அது அங்கு உள்ள சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி நேர்மறை  ஆற்றலை ஊக்குவித்து, பல நோய்களுக்கு மருந்தாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக வாஸ்துவில் விவரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் துளசி செடியை காலையும் மாலையும் மந்திரங்கள் உச்சரித்தும், தீபங்கள் ஏற்றியும், மலர்கள் மற்றும் சுத்தமான கங்கை நீரை  அர்ப்பணித்தும் வணங்கி வழிபடுகிறார்கள்.

இதையும் வாசிக்க: ஜேட் தாவரத்தின் பயன்கள்

 

துளசி செடி வாஸ்து: வீட்டில் துளசி செடி வளர்ப்பதன் நன்மைகள்

  • துளசி இலையில் பல மருத்துவ குணங்கள் இருப்பதால், அதை ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு மாற்று மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
  • புற்றுநோய், இருதய நோய், சுவாச நோய், தோல் நோய் போன்ற பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு பக்க பலமாக உதவுகிறது.
  • துளசி பல நோய்களில் இருந்து நம்மை குணப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் மன அழுத்தப் பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விடுவிக்கிறது.
  • பூச்சிகளை விரட்டும் ஒரு வித மருத்துவ குணத்தை துளசி செடி கொண்டுள்ளதால், அது கொசுக்களை விரட்டும் கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது.
  • துளசி செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் காற்றும் சுத்தமாகும். துளசி செடி காற்றில் உள்ள சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய நச்சு வாய்க்களை உறிஞ்சி விடும் என நம்பப்படுகிறது.
  • இனிமையான வாசனையுடைய துளசி செடி சுற்றுப்புறத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
  • சமையலிலும் துளசி மூலிகையாகப் பயன்படுகிறது.
  • துளசி செடியின் தண்டில் இருந்து ஜெப மாலைகளுக்கான மணிகளும் தயாரிக்கப்படுகிறது.
  • இந்து மதத்தின்படி திருமண வைபவங்கள் தொடங்குவதற்கு முன்பாக துளசி விவாகம் என்று அழைக்கப்படும் ஒரு சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கில் கோயில்களிலும் வீடுகளிலும் லக்‌ஷ்மி தேவியின் அம்சமாகிய துளசி செடியுடன் விஷ்ணு  பெருமானுக்கு சம்பிரதாயமான திருமணம் நடத்தப்படுகிறது.

இதையும் வாசிக்க: பணச் செடியின் பயன்கள்

 

மகிழ்வான திருமண வாழக்கையை வழங்கும் துளசி

வாஸ்து முறைப்படி வீட்டில் துளசி செடி வைத்து வழிப்பட்டு வந்தால், தம்பதியருக்கு மகிழ்ச்சியான வாழக்கை, அமைதி, செல்வச்  செழிப்பு, அதிர்ஷ்டம் அனைத்தையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.

 

ராமா, ஷ்யாமாவீட்டில் எந்த துளசி செடி வைத்து வளர்ப்பது சரி?

வீட்டில் இந்த இரண்டு வகை துளசி செடிகளில் எதை வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். ராமா மற்றும் ஷ்யாமா ஆகிய இரண்டு  துளசி செடிகளும் அதன் மருத்துவ குணங்களுக்காக பரவலாக அறியப்பட்டவை.

வாஸ்து சாஸ்திரத்தின்படி மங்களகரமாக கருதப்படும் புனித துளசி அல்லது பச்சை துளசி பொதுவாக எல்லா இடங்களிலும் கிடைக்கும்  செடிகள் ஆகும். இந்தியாவில் துளசி செடி பல்வேறு வகைகள் உள்ளன.

ராம துளசி

பச்சை இலைகளை கொண்ட துளசி ‘ஸ்ரீ துளசி’ என்று அழைக்கப்படுகிறது. இது அதிர்ஷ்ட துளசி, ராம துளசி அல்லது பிரகாசமான  துளசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ராம துளசி (Ocimum Sanctum) அதன் மருத்துவ குணங்களுக்காகவும், மத வழிபாடுகளிலும்  பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த துளசி இலைகளின் சுவையானது மற்ற துளசி வகைகளை விட மிகவும் இனிப்பானது.

ஷ்யாமா துளசி

கரும்பச்சை அல்லது ஊதா நிற இலைகள் மற்றும் ஊதா நிறத் தண்டு கொண்ட துளசிதான் ஷ்யாமா துளசி அல்லது கருந்துளசி அல்லது  கிருஷ்ண துளசி என்று அழைக்கப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஊதா நிறம்  பகவான் கிருஷ்ணரின் கருமையான நிறத்தை ஒப்பிடப்படுகிறது. ஷ்யாமா துளசி, கிருஷ்ண துளசி (Ocimum Tenuiflorum) என்றும்  அழைக்கப்படும் இந்த துளசியானது மற்ற துளசி வகைகளில் இருந்து தனித்துவமான மருத்துவ குணம் கொண்டது. இந்த கிருஷ்ண துளசி  தொண்டை நோய் தொற்றுகள், தோல் நோய்கள், காது வலி, மூக்கில் இருக்கும் புண் மற்றும் சுவாச பிரச்சினைகளிலிருந்து நிவாரணம்  அளிக்கவும் உதவுகிறது.

கற்பூர துளசி

நோய்களை குணப்படுத்தும் பண்பும், கடுமையான நோய்களை எதிர்த்து குணமடையச் செய்யும் பண்பும் கொண்டதாக இந்த வகை துளசி  பரவலாக அறியப்படுகிறது. இதன் நறுமணமானது பூச்சிகளையும் கொசுக்களையும் விடமால் தடுக்கிறது.

வனத் துளசி அல்லது காட்டுத் துளசி என்பவை மற்றொரு இந்திய துளசி வகை செடியாகும்.

 

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் துளசி செடியை எங்கு வைக்கலாம்?

துளசி செடியை அதற்கு ஏதுவான திசையில் வைத்து வளர்ப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்கள் இங்கே…

துளசி செடியை வைப்பதற்கு ஏற்ற திசை கிழக்கு திசையே. இருப்பினும் அதை பால்கனி அல்லது வடக்கு அல்லது வடகிழக்கு திசையில்  உள்ள ஜன்னல் அருகேயும்  வைக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின்படி வடக்கு திசை என்பது நீரின் திசையாகும். இந்த திசையில் துளசி  செடியை வைத்து வளர்ப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை வரவழைத்து, எதிர்மறை ஆற்றல்களை விலக்கி வீட்டில் நல்லச்  சூழலை உருவாக்க உதவுகிறது.

  • துளசி செடி இருக்கும் இடத்தில் போதுமான அளவுக்கு சூரிய ஒளி இருக்க வேண்டும்.
  • துளசி செடியை எப்பொழுதும் ஒற்றைப்படையில் வைப்பது நல்லது உதாரணத்திற்கு ஒன்று, மூன்று அல்லது ஐந்து.
  • துளசி செடியின் அருகே துடைப்பம், காலணிகள் அல்லது குப்பை தொட்டிகள் போன்றவற்றை வைக்காமல் இருப்பது நல்லது.
  • துளசி செடியை சுற்றியுள்ள இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
  • துளசி செடி அருகில் பூச்செடிகளை வைப்பது நல்லது.
  • வீட்டில் காய்ந்து போன செடியை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.

இதையும் வாசிக்க: வீட்டில் மூங்கில் செடி வளர்க்க வாஸ்து குறிப்புகள்

தரையில் துளசி செடி வளர்ப்பதை தவிர்ப்பீர்

துளசி செடி புனிதமாக கருதப்பட்டு வழிபடபட்டு வருவதால் அதனை நேரடியாக தரையில் நட்டு வைத்து வளர்க்கக் கூடாது. எனவே,  அதனை வடக்கு அல்லது வடமேற்கு மூலையை நோக்கியவாறு உயர்த்தப்பட்ட மேடையின் மீது ஒரு தொட்டியில் வைத்து  வளர்க்கலாம். புனிதமான துளசி செடியை வீட்டின் உள்ள ஜன்னல் அருகில் அல்லது பால்கனியில் வளர்க்கலாம்.

 

வீட்டில் துளசி செடியை வழிபடுவது எப்படி?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் இந்தப் புனிதமான துளசி செடியை வழிபடும்போது அதற்கென உள்ள சில விதிமுறைகளைப்  பின்பற்ற வேண்டும். வீட்டில் துளசி செடிக்கென ஒரு சிறிய கோயில் போன்ற அமைப்பையும் ஏற்படுத்தலாம்.

  • துளசி செடி ஒரு புனிதமான செடியாக கருதப்படுவதால் துளசி செடிக்கு அருகில் உள்ள சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் குப்பைகள் சேராதவாறும் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதற்கு இது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
  • துளசி செடி அருகில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது நல்லது.
  • துளசி செடிக்கு தினமும் கலசத்தில் இருந்து தண்ணீர் விடவும். அதேபோல் கலசத்தை எப்போதும் இரு கைகளால் பிடித்தே தண்ணீர் விட வேண்டும்.
  • தினமும் துளசி செடிக்கு பொட்டு வைத்து மலர்கள் தூவி தீபம் ஏற்றி வணங்குவது நல்லது.
  • துளசிச் செடியை தினமும் சுற்றிவரும்போது ஸ்லோகங்கள் கூறி சுற்றி வருவது நல்லது.

வீட்டில் மாடத்தில் துளசி செடி வைத்து வளர்ப்பதும் சிறந்தது. இந்த மாடம் என்பது நான்கு புறமும் சிமென்டால் கட்டப்பட்ட மேடை  போன்ற அமைப்பாகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, துளசி மாடத்தை பால்கனியின் வடகிழக்கு மூலை அல்லது வெளியில் அமைத்து  வழிபட்டு வரலாம். கிழக்கு திசை துளசி செடி வைத்து வளர்ப்பதற்கு ஏதுவான வாஸ்து திசையாகும்.

துளசி மாடம் கட்டமைப்பை மரம் அல்லது மார்பிள் பயன்படுத்தி கட்டுவது சிறந்தது. துளசி செடியை வைத்திருக்கும் இடத்தில்  போதுமான சூரிய ஒளி படும்படியும், அந்த இடம் சுத்தமாக உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். துளசி செடிக்கு  நெய் விளக்குகள் ஏற்றி வழிபடலாம்.

 

துளசி செடி வாஸ்து திசைகள்

Tulsi plant Vastu Shastra tips for your home

 

தவிர்க்க வேண்டிய துளசி செடி வாஸ்து திசை

துளசி செடியை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டுமெனில், வாஸ்துவில் பரிந்துரைக்கப்பட்ட திசைகளான வடக்கு அல்லது வடகிழக்கில்  மட்டுமே அச்செடியை வைத்து வளர்க்க வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி நெருப்பு அல்லது அக்னி தேவனின் இருப்பிடமான  தென்கிழக்கு திசையில் துளசி செடியை வளர்க்கக் கூடாது.

 

துளசி செடியை வழிபட சிறந்த நாள்?

பொதுவாக, இந்திய மக்கள் துளசி செடியை எல்லா நாட்களிலும் வழிபடுவார்கள். இருப்பினும் வாஸ்து சாஸ்திரத்தின்படி வாரத்தில்  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துளசியை வழிபடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

 

வீட்டில் துளசி செடி வைக்க சிறந்த நாள் எது?

நமது இந்து மத நம்பிக்கைகளின் அடிப்படையில், இந்து நாள்காட்டியின் வழிகாட்டுதலின்படி கார்த்திகை மாதம், வியாழக்கிழமைகளில்  துளசி செடியை வைப்பதற்கு ஏற்ற நல்ல நாளாகும்.

 

துளசி செடிக்கு நேரடி சூரிய ஒளி அவசியமா?

தோட்டக்கலை வல்லுநர்களின் கூற்றுப்படி, துளசி செடி வெதுவெதுப்பான மற்றும் சூரிய ஒளி படக்கூடிய ஜன்னலுக்கு அருகில்  வைக்கப்பட வேண்டும். 6-லிருந்து 8 மணி நேரம் சூரிய ஒளியில் செடியை வைப்பது சிறந்தது. எனவே, செடியை வைப்பவர் சூரிய ஒளி  நன்கு படக்கூடிய இடமாக தேர்ந்தெடுத்து தூளசியை வைக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய செடிகள்

 

வீட்டுக்குள் துளசி செடியை வளர்க்கலாமா?

துளசி செடியை வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம். ஆனால் அதற்கு சரியான சூரிய ஒளி  கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அது  மட்டும் இல்லாமல் பகலில் அதிக வெளிச்சம் கிடைக்கும் ஜன்னலுக்கு அருகில் வைக்க வேண்டும். மேலும், துளசி மலர்ந்து அதன்  நறுமணம் வீடெங்கும் பரவுவதற்கு ஏதுவாக வீட்டின் உட்புறம் சூடாகவும் மண் ஈர்ப்பதமாகவும் இருக்க வேண்டும்.

 

துளசி செடியை பராமரிப்பது எப்படி?

துளசி செடியில் உள்ள காய்ந்த இலைகளை நீக்கி, அதன் கிளைகளை அடிக்கடி வெட்டிவிட வேண்டும். துளசி செடிக்கு தொடர்ந்து  தண்ணீர் விட்டு ஈரப்பதமாகவே வைத்திருக்க வேண்டும். துளசி செடி எப்பொழுதும் பச்சையாகவும் நல்ல ஊட்டத்துடனும் இருப்பதற்கு  ரசாயனம் இல்லா உரத்தை பயன்படுத்துவது நல்லது.

 

அடிக்கடி கேட்க்கப்படும் கேள்விகள் (FAQs)

வீட்டில் எத்தனை துளசி செடிகளை வளர்க்கலாம்?

ஒற்றைப்படை எண்ணில் துளசி செடியை வைத்து வளர்க்கலாம்.

துளசி செடியை ஏன் வெளியே வைத்திருக்க வேண்டும்?

துளசி செடி வெப்பமண்டல சீதோஷனங்களில் வளரக் கூடியது. இதற்கு 6-8 மணி நேர சூரிய ஒளி தேவைப்படுகிறது.

துளசி செடியை எந்த திசையில் வைத்து வளர்ப்பது நல்லது?

கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு அல்லது வீட்டின் மத்தியில் துளசி செடியை வைத்து வளர்க்கலாம்.

 

Was this article useful?
  • 😃 (1)
  • 😐 (0)
  • 😔 (1)

Recent Podcasts

  • கொல்கத்தாவில் முத்திரை வரி மற்றும் சொத்து பதிவு
  • நிதியாண்டில் 33 நெடுஞ்சாலைகளை பணமாக்குவதன் மூலம் NHAI ரூ 54,000 கோடியை எதிர்பார்க்கிறது
  • வழிசெலுத்தல் அமைப்புகளை சோதிக்க நொய்டா விமான நிலையம் முதல் அளவுத்திருத்த விமானத்தை நடத்துகிறது
  • மும்பை எலிஃபெண்டா குகைகளில் ஆராய வேண்டிய விஷயங்கள்
  • சென்னை எம்ஜிஎம் தீம் பார்க்கில் செய்ய வேண்டியவை
  • Yeida குழு வீட்டு மனை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது