தமிழ்நாட்டில் ஒருவரது சொத்து மீதான சட்டரீதியிலான உரிமையை நிரூபிக்கும் ஆவணம்தான் ‘பட்டா’ என்று அறியப்படுகிறது. தமிழ்நாடு பட்டா சிட்டா நிலப் பதிவேடு வசதியை பொதுமக்களுக்காக தமிழ்நாடு அரசு தொடங்கியது முதலே பட்டா ஆவணத்தை ஆன்லைன் மூலமாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். வருவாய்த் துறையின் கீழ் இந்த சேவை அளிக்கப்படுகிறது.
பட்டா என்பது ஒரு நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி, அளவு, உரிமையாளர் முதலான விவரங்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இந்த இரு ஆவணங்களும் இணைக்கப்பட்டு, பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஓரே ஆவணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. குடிமக்கள் தங்களது சிட்டா பட்டா, அடங்கல் சான்றிதழ்களை இப்போது ஆன்லைன் மூலமாகவும் பார்க்க முடியும்.
தமிழ்நாடு வலைதளத்தில் இணையவழி சேவை மூலம் தமிழ்நாட்டில் ஆன்லைன் பட்டா பெற விண்ணப்பிக்கும் வழிகாட்டுதல்கள் இங்கே.
இதையும் வாசிக்க: மத்தியப் பிரதேச நிலப் பதிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?
பட்டா சிட்டா என்றால் என்ன? – பட்டா, சிட்டா இடையிலான வேறுபாடு
பட்டா | சிட்டா |
பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமையைக் காட்டும் வருவாய் ஆவணம் ஆகும். அரசால் வழங்கப்படும் இந்த ஆவணம், உரிமைகளின் பதிவேடு (ஆர்ஓஆர்) என்றும் அழைக்கப்படுகிறது. பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம் ஆகியவற்றின் பெயர், உரிமையாளரின் பெயர், சர்வே எண் மற்றும் உட்பிரிவு, நன்செய் நிலம் / புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி மற்றும் தீர்வை விவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே பட்டா | நில வருவாய் ஆவணமான சிட்டாவில் நிலம் அமைந்துள்ள பகுதி, அளவு, சொத்தின் உரிமையாளர் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த விவரம் அனைத்தும் கிராம நிர்வாக அலுவலரால் நிர்வகிக்கப்படும். மேலும், நிலத்தின் தன்மை என்பது நஞ்சையா அல்லது புஞ்சையா என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். |
கடந்த 2015-ல் தமிழ்நாடு அரசு நிலப் பதிவேடுகளை மின்னணுப் பதிவாக்குவதை நடைமுறைப்படுத்தியது. ஆன்லைனில் நிலப் பதிவேடுகளை தேடுவதை எளிமையாக்குவதே இதன் நோக்கம். குடிமக்கள் தங்களது பட்டா சிட்டா ஆவணங்களை ஆன்லைனிலேயே பார்ப்பதற்கு வசதியாக இ-சேவை தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பட்டா வகைகள்
பல்வேறு வகையான பட்டாக்கள் விவரம்:
- நத்தம் பட்டா: தங்கள் வருவாய் கிராமத்தில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இந்த வகை பட்டா வழங்கப்படுகிறது.
- ஏடி கண்டிஷன் பட்டா: கிராமத்தில் உபரியாக இருக்கின்ற நிலத்தில் மனைகளாகப் பிரித்து, நிலம் இல்லாத பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைக்க வேண்டியது, வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தாரின் பொறுப்பு ஆகும். பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படமும், தனி வட்டாட்சியரின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும்.
- நில ஒப்படை பட்டா: முன்னாள் ராணுவ வீரர்கள், பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் உள்ளிட்டோருக்கு அரசு நிலங்களை இலவசமாக வழங்கும். இதனை நில ஒப்படை பட்டா என்று அழைப்பர்.
- டிஎஸ்எல்ஆர் பட்டா என்பது நகர நில அளவைப் பதிவேடு ஆவணத்தைக் குறிக்கும்.
- யுடிஆர் (Updating Data Registry), மேனுவல் பட்டா, 2சி பட்டா மற்றும் கூட்டுப் பட்டா ஆகியவை இதர பட்டா வகைகள் ஆகும்.
பட்டா மற்றும் டிஎஸ்எல்ஆர் இரண்டும் ஒன்றா?
டிஎஸ்எல்ஆர் (TSLR) அல்லது நகர நில அளவைப் பதிவேடு (Town Survey Land Register) என்பது பட்டாவை போன்ற ஒரு ஆவணம். இது, தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கிராம நத்தம் நிலத்துக்காக வழங்கப்படுகிறது. கிராம நத்தம் நிலம் என்பது யாருக்கும் சொந்தம் இல்லாத பயன்படுத்தப்படாத நிலத்தைக் குறிக்கும். நகராட்சிக்குக் கீழ் உள்ள நிலத்துக்கு பட்டா வழங்கும் நிலையில், பஞ்சாயத்து அரசுக்குக் கீழ் உள்ள நிலத்துக்கு டிஎஸ்எல்ஆர் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் பட்டா கட்டணம்
தமிழ்நாட்டில் வருவாய்த் துறையின் வலைதளத்தின் மூலமாக பட்டாவை பார்ப்பதற்கும், டவுன்லோடு செய்வதற்கும் எந்தக் கட்டணமும் இல்லை. இது முழுக்க முழுக்க இலவச சேவைதான். அதேநேரத்தில், ஒரு பட்டா மாற்றப்படுவதற்கோ அல்லது பட்டாவின் உரிமையை மாற்றுவதற்கோ ஒருவர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
இதையும் வாசிக்க: மேற்கு வங்க பங்களாபூமி நில பதிவுகள் அனைத்து விவரங்கள்
பட்டா ஆன்லைன்: தமிழ்நாட்டில் பட்டா சிட்டாவுக்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து பட்டா சிட்டா நில சர்வே விவரங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் இங்கே…
படி 1: பட்டா சிட்டா ஆன்லைன் ஆக்சஸுக்கு லாக் ஆன் செய்ய வேண்டிய அதிகாரபூர்வ வலைதளம் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html
படி 2: பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு விவரங்களை பார்வையிடுவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
படி 3: வட்டம், கிராமம், சர்வே எண் போன்ற விவரங்களை பதிவு செய்து தொடருங்கள். ட்ராப்-டவுன் மெனுவில் அனைத்து மாவட்டங்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் உங்களது மாவட்டத்தைத் தேர்வு செய்து, பகுதி வகை கிராமப்புறமா, நகர்புறமா என்பதைக் க்ளிக் செய்து சமர்ப்பித்து தொடருங்கள்.
படி 4: நீங்கள் சமர்ப்பிக்கும்போது, நீங்கள் சமர்ப்பிக்கும்போது, உங்கள் சொத்து பற்றிய விவரங்களுடன் டவுன் சர்வே நிலப் பதிவாளரிடம் இருந்து ஆன்லைனில் சான்றிதழைப் பெறுவீர்கள். இந்தச் சான்றிதழில் இடம், நிலத்தின் வகை, நிலம், சர்வே நம்பர் விவரம் முதலான அனைத்து விவரங்களும் இருக்கும். இதை நீங்கள் ஆன்லைனிலேயே பெறலாம்.
* உதாரணம் காட்டும் நோக்கம் மட்டுமே
இதையும் வாசிக்க: தமிழ்நாடு 2021-ன் வழிகாட்டி மதிப்பு: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை. TNREGINET–ல் உள்ள நமது வழிகாட்டுதலையும் வாசித்து, மாநிலத்தில் வழிகாட்டி மதிப்பு மற்றும் பல தகவல்களை தமிழ்நாடு அரசு வலைதளம் மூலம் பெறுவது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
பட்டா: நமக்கு ஏன் தேவை?
பட்டா என்பது ஒருவருக்கு தனது நிலத்தின் மீதான சட்ட ரீதியிலான உரிமையை நிரூபிக்கக் கூடிய சட்ட ஆவணம் என்பதால், நில உரிமையாளருக்கும் அரசு அல்லது மூன்றாவது நபருக்கும் இடையே ஏதேனும் சிக்கல்கள் வந்தால் மிக முக்கிய ஆவணமாக பங்கு வகிக்கும். ஒருவேளை நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தால், அதற்கு உரிய நிவாரணத் தொகையைப் பெறுவதற்குத் தகுதியைக் காட்டும் ஆவணமாகவும் பட்டா இருக்கும். மேலும், அரசு வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஆன்லைன் பட்டா என்பது சொத்து ஒன்றை விற்கும்போதும் தேவைப்படும் அடிப்படை ஆவணங்களுள் ஒன்றாகத் திகழும். ஒருவேளை, காலி மனையாக இருந்தாலும் கூட, அந்த நிலத்தை சட்டபூர்வ உடைமையாக நிறுவுவதற்கு பட்டா ஆவணம்தான் அவசியமாகிறது.
இதையும் வாசிக்க: தெலங்கானா EC தேடல் குறித்த அனைத்தும்
பட்டா சிட்டா ஆவணங்களின் முக்கியத்துவம்
பட்டா என்பது நிலத்துக்கு மட்டுமே உரியதே தவிர, அடுக்குமாடி குடியிருப்புகளுக்குப் பொருந்தாது. எனினும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ள நிலத்துக்கு நீங்கள் பட்டா வைத்திருக்க வேண்டும். வெவ்வேறு உரிமையாளர்களின் பெயரில் பிரிக்கப்பட்டிருக்கும் ஓர் அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ள நிலத்தை பொதுவாக பிரிக்கப்படாத பங்கு (யுஎஸ்டி) என்று அழைக்கிறோம். வழக்கமாக, இந்தச் சூழலில் சிட்டா பட்டா வழங்கப்படுவதில்லை.
அதிகாரபூர்வ வலைதளத்தில் பார்க்க eservices.tn.gov.in/eservicesnew
இதையும் வாசிக்க: பங்கு பிரிக்கப்படாத நிலம் குறித்த அனைத்தும்
பட்டா: EC பட்டா சிட்டா ஆவணத்தை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?
தமிழ்நாட்டில் இப்போது ஒருவர் EC பட்டா சிட்டா சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெற முடியும். ஆன்லைனில் பட்டா ஆவணத்தைப் பெறுவதற்கு, குடிமக்கள் நாட வேண்டிய தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையரக வலைதளம் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html
ஒருவர் EC என்று சுருக்கமாக அழைக்கப்படும் வில்லங்க சான்றிதழைப் பெற TNREGINET வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம், ஒரு சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாக உள்ளது. வில்லங்கச் சான்றிதழ் என்பது ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளும் ஆவணமாக உள்ளது.
வில்லங்க சான்றிதழ் என்பது ஒரு சொத்தின் அசல் உரிமையாளர் அல்லாத வேறு யாரேனும் ஒருவரது கட்டுப்பாட்டில் நிலம் உள்ளதா என்பதை அறிய உதவும் ஆவணம் ஆகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சொத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆவணம்.
தமிழ்நாட்டு மக்கள் இ-சேவைகளைப் பெறுவதற்காக தமிழ்நாடு நில அளவைத் துறை வலைதளம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்போது, அவர்கள் மாநிலத்தில் உள்ள தங்களது நிலங்கள் மற்றும் வீடுகள் தொடர்பான தகவல்களை தங்களது கணினித் திரைகள் வழியே பெற முடியும். ஆன்லைனில் பட்டா பெறுவதற்கு இந்த வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். eservices.tn.gov.in வலைதளம் மூலம் ஒரு சொத்து உரிமையாளர் பெறக் கூடிய தகவல்கள்:
- பட்டா/சிட்டா நகல் & அ-பதிவேடு விவரங்கள் – கிராமப்புறம்
- பட்டா/சிட்டா நகல் & அ-பதிவேடு விவரங்கள் – நகர்ப்புறம்
- பட்டா/சிட்டா நகல் & அ-பதிவேடு விவரங்கள் சரிபார்க்கலாம்
பட்டா: ஆவணத்தில் உங்கள் பெயரை மாற்ற படிப்படியான வழிமுறை
நீங்கள் ஆன்லைன் மூலம் பட்டாவில் பெயரை மாற்ற முடியாது. கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் பெயர் மாற்றும் நடைமுறையில் ஈடுபட வேண்டும். அலுவலகம் சென்று அதற்கு உரிய படிவத்தைக் கேட்டுப் பெறுங்கள். விற்பனைப் பத்திரம், வரி ரசீதுகள், மின் கட்டண ரசீது, வில்லங்கச் சான்றிதழ் முதலானவற்றை கையில் வைத்திருங்கள். இவற்றை நீங்கள் காட்ட வேண்டியிருக்கலாம். படிவத்தை பூர்த்தி செய்த பின் கையெழுத்திட்டு உரிய ஆவணங்களை இணைத்து அளிக்க வேண்டும். ஆவணத்தில் பெயர் மாற்றங்கள் செய்வதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம். அதன்பின் உங்களுக்கு புதிய பட்டா வழங்கப்படும்.
மனையை விற்க / வாங்க பட்டா சிட்டா அவசியமா?
பட்டா சிட்டா என்பது நிலம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்குத் தேவையான சட்டபூர்வ ஆவணம் ஆகும். எனவே, ஒரு வீடு கட்டும்போது, இந்த ஆவணத்தை கட்டிடம் கட்டுபவர் வைத்திருக்க வேண்டியது அவசியம். எனினும், சொத்து வாங்கும் தனிநபர்களுக்கு பட்டா சிட்டா ஆவணம் வழங்கப்படுவது இல்லை.
பட்டா சிட்டா: தமிழ்நாட்டில் சிட்டா பட்டா பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
நீங்கள் ஆன்லைனில் பட்டா சிட்டா பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும் எனில், கீழ்கண்ட ஆவணங்கள் தேவை. இவற்றை கையில் வைத்திருங்கள். இவற்றின் விவரம்:
- அசல் விற்பனைப் பத்திரத்துடன், அந்தப் பத்திரத்தின் நகலும் தேவை. இவை சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் இவை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- சொத்துக்கான சான்றுகள் எவையேனும் வைத்திருக்க வேண்டும். இவை சொத்து வரி செலுத்தியதன் ரசீது, மின் கட்டண ரசீது அல்லது வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் சொத்து மீதான உங்கள் உரிமைக்கும், சட்டபூர்வ உடைமைக்கும் சான்றாக இருப்பவையாகும். மேலும், பட்டா சிட்டா விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது கூடுதல் ஆவணங்களாக அடையாள அட்டை, வசிப்பிடச் சான்று, ரேஷக் கார்டு, குடிமக்கள் சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமான விவரம் ஆகியவற்றையும் அளிக்க வேண்டிவரும்.
ஆன்லைனில் பட்டா சிட்டா நில சர்வே எண் விவரங்கள்
நீங்கள் ஆன்லைன் மூலம் பெறக் கூடிய பட்டா சிட்டா ஆவணத்தின் தகவல்கள்:
- உரிமையாளரின் பெயர்
- பட்டா எண்ணிக்கை
- உட்பிரிவு மற்றும் சர்வே எண்
- உரிமையாளரின் மாவட்டம், கிராமம், வட்டம் ஆகியவற்றின் பெயர்கள்
- பகுதி அல்லது நிலத்தின் பரிணாமங்கள்
- உரிமையாளரின் வரி விவரங்கள்
- புஞ்சை அல்லது நஞ்சை நில விவரங்கள்
- சிட்டா நில உரிமை
நிலத்தின் இயல்புத் தன்மை
நஞ்சை: இது நன்செய் நிலமாகும் – ஏரி, ஆறு, கால்வாய் அல்லது நீர்நிலைகளை சார்ந்திருப்பவை.
புஞ்சை: இது புன்செய் நிலமாகும் – கிணறு, போர்வெல் முதலான மிகக் குறைந்த நீராதாரங்களைக் கொண்ட நிலங்கள்
இதையும் வாசிக்க: விவசாய நிலங்களை வீட்டுமனை பயன்பாட்டுக்கு மாற்றுவது எப்படி?
ஆன்லைன் பட்டா: மொபைல் ஆப் சேவைகள்
கடந்த 2018-ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘அம்மா இ-சர்வீஸ் ஆஃப் லேண்ட் ரெக்கார்டு’ ஆப் என்ற ஆண்ட்ராய்டு செயலியை தொடங்கிவைத்தார். இதர சேவைகளுடன் நிலப் பதிவேடுகள், பட்டா சிட்டா ஆவணங்களை பயனர்கள் அணுகுவதற்கு இந்த மொபைல் ஆப் அனுமதிக்கிறது.
மொபைல் ஆப் மூலம் பட்டா சிட்டா ஆவணங்களை அணுகுவது எப்படி?
அம்மா இ-சேவை நிலப் பதிவேடு செயலி மூலம் பட்டா சிட்டா ஆவணத்தை அணுகுவது மிகவும் எளிதாகும். இந்த ஆப் வழியாக பட்டா சிட்டா ஆவணத்தை அணுக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
1. செயலியை இன்ஸ்டால் செய்க – தனிநபர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று அம்மா ஆப் (AMMA e-service of Land Records) செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த செயலியைப் பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்ளக்கூடிய தகவல்கள்:
2. அ-பதிவேடு (A-register)-ஐ க்ளிக் செய்க. இந்தப் பக்கத்தில் தனிநபர்கள் தங்களது மாவட்டத்தின் பெயர் மற்றும் இதர விபரங்களை சமர்ப்பித்து நிலத்தின் வகை, மண், ஒரு ஹெக்டேரின் விலை, நீர்ப்பாசன முறைகள் மற்றும் பல தகவல்களையும் சரிபார்க்கலாம்.
3. சிட்டா – தனிநபர்கள் தங்களது பட்டா எண் அல்லது சப்-டிவிஷன் எண்ணை சமர்ப்பித்து பட்டா விவரங்களைப் பெறலாம். படிவத்தின் கடைசியில் உள்ள ‘get details’ – தகவல்களைப் பெறுக என்ற பட்டனை அழுத்தினால் விவரங்கள் அனைத்தும் காட்டப்படும்.
தமிழ்நாட்டில் நிலப் பதிவுக்கு பட்டா அவசியமா?
கட்டிடங்கள் அல்லது கட்டமைப்புகளாக இருப்பின் நேரடிப் பயன்பாட்டையும் உடைமைகளையும் காட்டி நிரூபிக்கலாம். ஆனால், காலை மனையாக இருந்தால் அது சாத்தியமில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள ஒரு நிலத்துக்கான உங்களது சட்ட உரிமையை நிரூபிக்க பட்டா என்பது அவசியமாகிறது.
கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மூன்றாவது மாநிலமாக நில உரிமைக்கு பட்டா சிட்டா ஆவணத்தை ஒரு சான்றாக ஆக்கியிருக்கிறது தமிழ்நாடு. நில மோசடிகளை தடுக்கவும், சொத்துப் பதிவுகளை பாதுகாப்பானதாக ஆக்கவும் பட்டாவை கட்டாயமாக்க 2018-ல் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதுநாள் வரையிலுமே நிலத்தின் பட்டா அல்லது மூலப் பத்திரத்தை சமர்ப்பித்தால்தான் ஒரு சொத்து அல்லது நிலத்தை பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் ஸ்டாம்ப் விலை மற்றும் நிலப் பதிவுக் கட்டணம் குறித்த அனைத்தும்
தமிழ்நாட்டில் அடுக்குமாடி குறியிருப்பு வீட்டை (ஃப்ளாட்) பதிவுசெய்ய பட்டா தேவையா?
பட்டா என்பது நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்குத் தேவையான ஒரு சட்டப்பூர்வமான ஆவணம் மற்றும் அது அடுக்குமாடி குடியிருப்புக் (பிளாட்டு)களுக்குப் பொருந்தாது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளருக்கு பட்டா வழங்கப்படுவதில்லை, ஏனெனில் அந்த குறிப்பிட்ட தனிநபருக்கு அந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்ட நிலத்தில் மட்டுமே பிரிக்கப்படாத பங்குரிமை உள்ளது.
ஒரு பழைய கட்டிடத்தை மறுசீரமைக்கும் போது தேவைப்படும் பட்சத்தில், நிலத்தில் பிரிக்கப்படாத பங்கின் உரிமையை அனைத்து உரிமையாளர்களும் வைத்திருப்பதால், அனைத்து பிளாட் உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்து கூட்டுப் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் பட்டாவிற்கு விண்ணப்பிக்க eservices tn gov போர்ட்டலுக்கு வருகை தரவும்.
ஆன்லைனில் பட்டா சிட்டா நிலையை தெரிந்துகொள்வது எப்படி?
நீங்கள் ஆன்லைனில் பட்டா சிட்டாவுக்கு விண்ணப்பித்து இருந்தால், அதன் நிலையை ஆன்லைனிலேயே தெரிந்துகொள்ளலாம். உங்களது அப்ளிகேஷன் ஐடியைப் பயன்படுத்தி அறியலாம். உங்களது ரெஃபரன்ஸ் எண்களை அளித்து செல்லுபடியாகும் காலத்தையும் அறியலாம். ஆன்லைனில் பட்டா சிட்டா ஆவணத்தை நீங்கள் குறைந்த கட்டணத்திலேயே பெற முடியும்.
தமிழ்நாடு பட்டா சிட்டாவை சரிபார்ப்பது எப்படி?
உங்கள் பட்டா சிட்டாவை சரிபார்க்க விரும்பினால், இந்த இணைப்புக்குச் சென்று ‘பட்டா/சிட்டா விவரங்கள்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். உங்களுடைய குறிப்பு எண்களை சமர்ப்பித்தால் பட்டா சிட்டா ஆவணத்தை ஆன்லைனிலேயே சரிபார்த்துவிடலாம்.
பட்டா சிட்டாவை மாற்றுவது எப்படி?
ஒருவேளை நிலத்தின் உரிமையாளர் தனது உயிலை எழுதி வைக்காமலயே இறந்துவிட்டார் எனில், அவரது வாரிசுகள் பெயருக்கு பட்டா சிட்டாவை மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை இறந்துபோன அந்த உரிமையாளர் உயில் எழுதி வைத்திருந்தார் என்றால், வாரிசு சட்டத்தின்கீழ் பரஸ்பர ஒப்புதலுடன் அவருடைய சட்டபூர்வ வாரிசுகள் தங்கள் பெயருக்கு பட்டா சிட்டாவை மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை, அந்த நிலம் விற்கப்பட்டிருந்தால், வாங்கியவரின் பெயருக்கு பட்டா, சிட்டா மாற்றப்பட்டுவிடும்.
நீங்கள் கண்டிப்பாக பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விற்பனைப் பத்திரம், வரி ரசீதுகள், மின் கட்டண ரசீது, வில்லங்கச் சான்றிதழ் ஆகியவற்றின் ஜெராக்ஸ் மற்றும் அசல் ஆவணங்களை பட்டா சிட்டா மாற்ற விண்ணப்பிக்கும்போது கொண்டு செல்ல வேண்டும்.
இதற்கான விண்ணப்பம் என்பது சம்பந்தப்பட்ட துறையின் பரிசீலனையின் அடிப்படையில் ஏற்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். பட்டா சிட்டா மாற்றுவதற்கான கட்டணம் ரூ.100 மட்டுமே.
இதையும் வாசிக்க: அனைத்து பற்றியும் அல்லது TNREGINET வலைதளம்
அரசு புறம்போக்கு நிலத்துக்கான பட்டா சிட்டா நிலையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
தரிசு நிலம் அல்லது அரசுக்குச் சொந்தமான நிலம் என்பதை புறம்போக்கு நிலம் என்கிறோம். இது வருவாய்த் துறை பதிவேடுகளில் பட்டியலிடப்பட்டிருக்காது. இதன் நிலையை சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்:
- பட்டா சிட்டாவுக்கான வலைதளத்துக்குச் செல்லுங்கள் அல்லது க்ளிக் செய்க eservices.tn.gov.in/eservicesnew
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட’ என்பதை க்ளிக் செய்க.
- அப்போது வரும் பக்கத்தில் மாவட்டம், கிராமம், வட்டம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை பதிவு செய்க.
- கடைசியில் சரிபார்க்கும் நடைமுறையை நிறைவு செய்ய ‘சமர்ப்பி’ பட்டனை க்ளிக் செய்க.
பட்டா சிட்டாவுக்கான இதர தேவைகள்
பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் பலவற்றுக்கும் தகுதி பெறுவதற்காக உங்களிடம் தமிழ்நாடு அரசு கேட்கக் கூடிய ஆவணங்கள்: வசிப்பிடச் சான்று, சாதி சான்றிதழ், குடும்ப வருமானம் உள்ளிட்ட விவரம், குடும்ப அட்டை, ஜிஎஸ்டி எண், திட்ட அறிக்கை முதலானவற்றுடன் பட்டா/சிட்டா (நிலம் வாங்க அல்லது அதன் மேம்பாட்டுக்கு). எனவே, இவற்றை கையில் வைத்துக்கொள்ளுங்கள்.
என் FMB-யை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
எஃப்எம்பி (FMB) அல்லது நில அளவை புத்தக வரைபடம் அல்லது புலப்படம் என்பது தமிழ்நாட்டில் தாசில்தார்களால் நிர்வகிக்கப்படும் புலப்பட ஆவணம் ஆகும். நில உரிமையாளர்கள் நில அளவை வரைபட விவரத்தை தாசில்தார் அலுவலகத்தில் கேட்டுப் பெறலாம்.
நில அளவை வரைபடத்தை ஆன்லைன் தளத்திலும் அவர்கள் பார்க்கலாம் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html
படி 1: ‘நில அளவை வரைபடம்’ என்னும் ஆப்ஷனில் க்ளிக் செய்க.
படி 2: அடுத்தப் பக்கத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களைத் தருக. ‘சமர்ப்பி’ மீது அழுத்திவிட்டு பின்னர் ‘நில அளவை வரைபடம் பார்க்க’ என்னும் ஆப்ஷனை க்ளிக் செய்க.
தமிழ்நாடு முழுவதுமே பட்டா சிட்டா, அடங்கல் கிடைக்கிறதா?
தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் நிலப் பதிவுகள் கிடைக்கின்றன. அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பட்டா சிட்டா மற்றும் அடங்கள் சான்றிதழ்கள் கிடைக்கின்றன.
இதையும் வாசிக்க: பிஹார் பூமி பற்றிய அனைத்தும்
பட்டா சிட்டா: போலி ஆவணங்கள் ஜாக்கிரதை
காகித வடிவிலான பட்டாக்களை படிப்படியாக நீக்கும் முயற்சியாக, கடந்த 2018-ம் ஆண்டு, புவிசார் ஒருங்கிணைப்புகளின் உதவியுடன் நிலம் குறிக்கப்பட்டு, புவிசார் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ் – GIS) அடிப்படையிலான பதிவுமுறையை தமிழ்நாடு பதிவுத் துறை கொண்டு வந்தது. எளிமையானதும் வெளிப்படையானதுமான பதிவுத் துறை நிர்வாகம் (ஸ்டார் 2.0 – STAR 2.0) என்னும் வசதியின் அப்டேட் வெர்ஷன் தான் இது. இதன்மூலம் பட்டாக்களுக்கான காகிதப் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படுவதுடன், போலி பட்டாக்கள் பிரச்சனைகளைக் களையவும் வழிவகுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போலி பட்டா சிட்டா அடங்கல்கள் பிரச்சனையைத் தடுப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். போலி பட்டா விஷயத்தில் பாதிக்கப்படுபவகள், குறிப்பிட்ட நிவாரணச் சட்டம், 1963-ன் பிரிவு 34-ன் கீழ் புகார் மனு தாக்கல் செய்யலாம்.
தாலுக்கா அலுவலகத்தில் வேறொருவருக்கு வழங்கப்பட்ட நிலப் பட்டாவை ரத்து செய்வது எப்படி?
அசல் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்துக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வழியாக கடிதம் அனுப்புங்கள். அடுத்த 30 நாட்களில், சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் செல்லுங்கள். அப்படியும் சரி செய்ய முடியவில்லை என்றால், உரிய தகவல்கள் மற்றும் ஆதாரங்களுடன் வருவாய் அலுவலகத்தை அணுகுங்கள்.
ஒரு பதிவேட்டை பார்ப்பதற்கான நடைமுறை என்ன?
- நீங்கள் சென்று பார்க்க வேண்டிய அதிகாரபூர்வ வலைதளம் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html
- அங்கே உள்ள ஆப்ஷன்களில் ‘View A-Register Extract’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்க.
- உரிய இடங்களில் மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் மற்றும் சப் டிவிஷன் எண் ஆகிய விவரங்களைப் பதிவு செய்யுங்கள். பிறகு, அங்கே காட்டப்படும் உறுதிப்பாட்டு குறியீடுகளை அளித்து ‘Submit’ என்பதன் மீது க்ளிக் செய்து நடைமுறையைத் தொடருங்கள்.

மின்னணுப் பதிவில் அடங்கல்
ஒவ்வொரு கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலரால் (VOAs) பராமரிக்கப்படும் அடிப்படை நிலப்பதிவேடுதான் அடங்கல் ஆகும். விவசாயிகளால் பருவ வாரியாக பயிர் செய்யப்படும் பயிர்களின் விவரம், விளைச்சல், நீர் ஆதாரம் போன்ற பல்வேறு புள்ளி விவரங்கள் இந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். கடந்த 1428-ஆம் பசலி ஆண்டு வரை அடங்கல் பதிவேடானது கிராம நிர்வாக அலுவலர்களால் கையினால் எழுதப்பட்டு வந்தது. இது பணிச்சுமை மிக்கதாகவும், காலம் பிடிக்கக் கூடிய பணியாகவும் இருந்தது. எனவே, இந்த முறையை எளிமைப்படுத்திட அடங்கல் பதிவேட்டினை மின்னனுப் பதிவிற்கு மாற்றம் செய்யும் இ-அடங்கல் திட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதன்படி, இணையம் மூலமாக இ-அடங்கல் விண்ணப்பிக்க 2018-ல் வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-ல் மொபைல் செயலி அறிமுகமானது. இ-அடங்கல் விண்ணப்பம் மூலம் விவசாயிகள் தங்கள் சாகுபடியை பதிவு செய்யவும், அரசுக்குத் தேவையான தகவல்களை வழங்கிடவும் வழிவகுக்கப்பட்டது.
இ-அடங்கல் விண்ணப்பம் பற்றியும் பயனர்கள் தெரிந்துகொள்ள அண்மையில் தமிழ்நாடு அரசு தொடங்கிவைத்து, வருவாய்த் துறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் வலைதளம் https://www.cra.tn.gov.in/
இ–அடங்கல் டவுன்லோடு செய்வதற்கான நடைமுறை
- விவசாயிகள் https://www.tnesevai.tn.gov.in/ வலைதளத்தில் லாக் ஆன் செய்து, சாகுபடி விவரங்களை சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்திய பிறகு அடங்கல் சான்றை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
- புதிய பயனர்கள் வலைதளத்தில் சைன்-அப் செய்ய வேண்டும்
- இ-அடங்கல் டவுன்லோடு ஆப்ஷனை விவசாயிகள் க்ளிக் செய்யலாம். குடிமக்கள் கணக்கு எண் (CAN) அல்லது பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணை அவர்கள் அளிக்க வேண்டும்.
- அடுத்து சரிபார்ப்புக்க ஓடிபி வரும். அதைப் பயன்படுத்த வேண்டும்.
- அதன்பின், அவர்கள் சர்வே எண்ணை தேர்ந்தெடுத்து ப்ரொசீட் செய்து ‘Pay now’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- ஆன்லைனில் கட்டணம் செலுத்திய பிறகு இ-அடங்கல் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் DKT பட்டா என்றால் என்ன?
DKT நிலம் என்பதன் முழு விரிவாக்கம் தரகஸ்து நிலம் என்பதாகும். DKT நிலம் என்பது DKT பட்டாவின் கீழ் ஏழைகளுக்கு இலவசமாக ஒதுக்கப்பட்ட மாநில அரசின் நிலத்தைக் குறிக்கிறது. இந்த நிலத்தை சாகுபடி செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும். நிலம் வாங்குவதற்கு போதிய மூலாதாரங்களோ, நிதியோ இல்லாதவர்களுக்கு இது சிறந்த பலனளிக்கிறது. அரசால் அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட அத்தகைய நிலங்களை விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது மற்றும் அத்தகைய பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாகக் கருதப்படும்.
பட்டா சிட்டா: ஹெல்ப்லைன் எண்கள்
நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரகத்தை குடிமக்கள் கீழ்கண்ட முகவரி, இ-மெயில் மற்றும் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்:
முகவரி: எண்.1, சர்வே ஹவுஸ், காமராஜர் சாலை, சேப்பாக்கம், சென்னை – 600005
இ-மெயில் ஐடி: dir-sur[at]nic[dot]in
மொபைல் எண்: 044-28591662
பட்டா சிட்டா தற்போதய செய்தி நிலவரம்
அப்டேட் செய்யப்பட்டது மார்ச் 16, 2022
விவசாய நிலங்களுக்கு ஒருங்கிணைந்த நில ஆவணம் அறிமுகம்
இணையவழி சேவை மூலம் அ-பதிவேடு, சிட்டா, புலப்படங்கள் மற்றும் அடங்கல்கள் ஆகிய நான்கு ஆவணங்களை உள்ளடக்கி ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு செப்டம்பர் 2021-ல் அறிவித்தது. மாநிலத்திலுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய நில உரிமையாளர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அ-பதிவேடு, சிட்டா மற்றும் புலப்படங்கள் ஆகியவற்றின் விவரங்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும் வசதி உள்ளது. மேலும் பயிர் சாகுபடி, நிலப்பயன்பாடு போன்ற விவரங்களை உள்ளடக்கிய இ-அடங்கல்களும் பரமாரிக்கப்பட்டு வருகிறது. இப்போது, இந்த நான்கு ஆவணங்களையும் உள்ளடக்கி ‘ஒருங்கிணைந்த நில ஆவணம்’ இணையவழி சேவை மூலம் வழங்கப்படுகிறது.
மேலும், பட்டா வைத்திருப்பவர்கள் தங்கள் நிலத்தை சர்வே செய்வதற்காகவும், புல எல்லைகளை அளவிடுவதற்காகவும் இணையவழி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. இப்போது வரை, விவசாயிகள் தாசில்தார் அலுவலகத்துச் சென்றோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோதான் இந்த சேவையைப் பெற முடிகிறது.
அப்டேட் செய்யப்பட்டது நவம்பர் 2, 2021
வருவாய்த் துறையின் வலைதளங்களை தொடங்கியது தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கிவைத்த வருவாய்த் துறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் வலைதளம் https://www.cra.tn.gov.in/. இந்த வலைதளத்தின் மூலம் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் அரசாணைகளை குடிமக்கள் தெரிந்துகொள்ளலாம். இ-சான்றிதழ்கள் மற்றும் இ-அடங்கல் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட இணையவழி சேவைகளையும் இந்த வலைதளம் மூலம் பயனர்கள் பெறலாம். மேலும், சப்-கலெக்டர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான வலைதளங்களையும் அரசு தொடங்கியுள்ளது.
இதையும் வாசிக்க: ஒடிசா இ-பவுதி குறித்த அனைத்தும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
நான் பட்டா சிட்டா ஆன்லைன் நிலையை தெரிந்துகொள்வது எப்படி?
நீங்கள் லாக் ஆன் செய்ய வேண்டிய அதிகாரபூர்வ வலைதளம் https://edistricts.tn.gov.in/revenue_report/status.html இங்கே உங்களது விவரங்களை அளித்த பின்பு சிட்டா பட்டா நிலையை தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் பட்டா சிட்டா பெற கட்டணம் எவ்வளவு?
பட்டா சிட்டா ஆவணத்துக்கு நீங்கள் ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டிவரும்.
பட்டா வழங்குவது யார்?
தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்படுகிறது. இது, குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் கிடைக்கும்.
பட்டா சிட்டா கஸ்டமர் கேர் நம்பர் என்ன?
உங்களது கருத்துகளை பதிவு செய்ய ஐடி ஒன்றை உருவாக்கி, eservices@tn.nic.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துகளை அனுப்பலாம்.
பட்டா சிட்டாவுக்காக இயங்கும் அருகில் உள்ள தாலுகா அலுவலகத்தைக் கண்டறிவது எப்படி?
உள்ளூர்வாசிகளிடம் தகவல் கேட்டாலே பக்கத்தில் எங்கே தாலுகா அலுவலகம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். அல்லது, மாவட்ட தலைமையகங்களுக்குச் செல்லலாம். அருகில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முகவரியை மாவட்ட தலைமையகம் தந்துவிடும்.
தமிழ்நாட்டில் அடங்கல் என்றால் என்ன?
நிலத்தின் உரிமையாளர், பகுதி, நிலத்தின் பயன்பாடு, குத்தகை, பயிர்கள் உள்ளிட்ட நிலம் சார்ந்த விவரங்களை உள்ளடக்கிய வருவாய்ப் பதிவேடுதான் அடங்கல். இந்த ஆவணத்தில் நிலத்தின் சர்வே எண்ணும் இருக்கும்.
TSLR என்பதன் விரிவாக்கம் என்ன?
டவுன் சர்வே நிலப் பதிவு என்பதுதான் TSLR-ன் விரிவாக்கம். இது, நகர நில அளவைப் பதிவேடு என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள நிலத்துக்கான வருவாய் நிலப் பதிவேடுகளை இது குறிக்கும்.
அ-பதிவேடு என்றால் என்ன?
மாநிலத்தில் வி.ஏ.ஓ (கிராம நிர்வாக அலுவலர்) அலுவலகம் பராமரிக்கும் நிலப் பதிவேடுதான் அ-பதிவேடு. இதில் வகைகள், உரிமையாளரின் பெயர், வரி அளவீடு உள்ளிட்ட சொத்து விவரங்கள் இருக்கும்.
பட்டா சிட்டா மொபைல் செயலியை டவுன்லோடு செய்வது எப்படி?
உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் ப்ளே ஸ்டோர் (Google play store) பகுதிக்குச் செல்லுங்கள். Amma e-service of the Land Records mobile application என்று டைப் செய்து தேடுங்கள். அந்த அதிகாரபூர்வ செயலியை இன்ஸ்டால் செய்யுங்கள். இன்ஸ்டால் செய்தவுடன், அந்தச் செயலிக்குள் சென்று உங்கள் மொபைல் எண்களைக் கொண்டு பட்டா சிட்டா விவரங்களைக் கண்டறியுங்கள்.