ரியல் எஸ்டேட் அல்லது நிலத்தின் உரிமை உங்களிடம் இருந்தால், அதற்கு நீங்கள் செலவு செய்ய வேண்டிவரும். அதாவது உங்கள் பெயரில் சொந்தமாக இடமோ அல்லது நிலமோ இருந்தால், அந்த நிலத்திற்கு நீங்கள் தொடர்ந்து வரி செலுத்த வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள சிறப்புச் சட்டங்களின்படி நிலம், காலி மனை அல்லது அந்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் வீடு, கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரியல் எஸ்டேட் உடைமைகளுக்கு, அதன் உரிமையாளர் என்ற முறையில் ஆண்டுக்கு இருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி செலுத்த வேண்டும்.
நில வரி (Land tax) என்பது சொத்தின் மீதான பரந்த வரையறையைக் குறிக்கிறது. நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களாக்கள், மாளிகைகள் மற்றும் வில்லாக்களுக்கு சொத்து வரி செலுத்துவதைப் போல, அவர்களது நிலத்திற்கும் ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். நில வரியை யார் விதிக்கிறார்கள், சொத்துக்கான நில வரியைக் கணக்கிட என்னனென்ன முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இதையும் வாசிக்க: இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நிலம் மற்றும் வருவாய்ப் பதிவு சொற்கள்
நில வரி விதிப்பது யார்?
நில வரி என்றும் அழைக்கப்படும் சொத்து வரி (Property tax) என்பது நகராட்சி எனப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் உங்கள் நிலத்தினுடைய மதிப்பைக் கணக்கிட நகராட்சிகள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு, அந்த மதிப்பிற்கு ஏற்ப சொத்து வரி விகிதத்தை தீர்மானிக்கின்றன. இந்த வரி, மதிப்பீட்டு ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு முறை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்தப்பட வேண்டும். நில வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி குடிநீர், மின்சாரம், கழிவுநீர் அமைப்புகள், வடிகால், தெரு விளக்குகள், தூய்மைப் பணி உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கும் பராமரிப்பதற்கும், அந்தந்தப் பகுதிகளில் உள்கட்டமைப்பை உருவாக்கவும் மேம்படுத்தவும் செலவிடப்படுகிறது. ஒவ்வோர் உள்ளாட்சி அமைப்புகளும் வெவ்வேறு விதிகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளைக் கடைபிடிப்பதால் நில வரி விகிதம், ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவொரு நகரத்துக்கும் வேறுபடும்.
யாரெல்லாம் நில வரி செலுத்த வேண்டும்?
கட்டிடங்கள் ஏதும் கட்டப்படாமல் ஒரு மனை காலியாக இருக்கும் வரை, அதன் உரிமையாளர் நில வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அதேநேரத்தில் காலியான வீட்டிற்கு இந்த விதி பொருந்தாது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இதையும் வாசிக்க: காலி வீட்டு சொத்துக்கு வரியைக் கணக்கிடுவது எப்படி?
மேலும், நிலம் அல்லது சொத்து வரி என்பதும் உங்கள் வருமானத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் செலுத்த வேண்டிய வருடாந்திர வருமான வரியும் ஒன்று இல்லை. வருமான வரிச் சட்டத்தின்படி, உங்கள் ஆண்டு வருமானத்தில் வீடு, சொத்திலிருந்து வரும் வருமானத்திற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். அதுவும், உள்ளாட்சி அமைப்புக்குச் செலுத்தும் சொத்து வரியும் வேறு வேறானவை.
இதையும் வாசிக்க: உங்கள் வீட்டு சொத்தில் இருந்து வருமானத்தைக் கணக்கிடுவது எப்படி?
நில வரி கணக்கிடப்படுவது எப்படி?
நிலத்தின் அளவு, அவை அமைந்துள்ள இடம், அதற்கான வசதிகள் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் உள்ள சொத்துக்களுக்கு நில வரி வசூலிப்பதற்கான ஆண்டு மதிப்பை தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் இந்த மதிப்பீட்டிற்காக வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் உள்ள பல நகராட்சி (உள்ளாட்சி) அமைப்புகள், இந்த வருடாந்திர கட்டண நிர்ணயத்திற்கு முக்கியமாக மூன்று நில மதிப்பு கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்தப்படுகின்றன.
வருடாந்திர வாடகை மதிப்பீட்டு முறை
சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மாநகராட்சிகள் ஆண்டு சொத்து மதிப்பை கணக்கிட இந்த முறையைப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு சொத்தும் ஒரு குறிப்பிட்ட மாதாந்திர வாடகை மதிப்பைக் கொண்டிருக்கும். உண்மையில் அந்தச் சொத்து வாடகைக்கு விடப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை கணக்கில் கொள்ளாமல், அந்தச் சொத்தின் வருடாந்திர வாடகை மதிப்பின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட சதவீதம் நில வரியாக செலுத்தப்பட வேண்டும்.
அலகு பகுதி மதிப்பீட்டு முறை
அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பாட்னா நகராட்சிகள் நில வரியைக் கணக்கிட இந்த முறையைப் பயன்படுத்துகின்றன. இந்த முறையின்படி, நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் பகுதி அல்லது கார்பெட் பகுதியின் அடிப்படையில் ஒரு யூனிட் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மதிப்பை தீர்மானிக்கும்போது, சொத்தின் இருப்பிடம் மற்றும் அதன் பயன்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. சொத்து எவ்வளவு வருமானம் ஈட்டித் தரும் என்பதையும் கணக்கில் கொண்டு வரி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
மூலதன மதிப்பீட்டு முறை
மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC-பிஎம்சி) சொத்தின் மூலதன மதிப்பின் அடிப்படையில், சொத்து வரி விதிப்பதற்கான விதிகளை உருவாக்க உத்தேசித்தது. எனினும், ஏப்ரல் 2019-ல் மும்பை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்தது. இந்த முறையின்படி, உள்ளாட்சி அமைப்பால் சொத்தின் சந்தை மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்டு, அதன் அடிப்படையில் நில வரி தீர்மானிக்கப்படுகிறது.
இதையும் வாசிக்க: நில மதிப்பை கணக்கிடுவது எப்படி?
முதன்மை நகரங்களில் சொத்து வரி செலுத்துவதற்கான வழிகாட்டி
- அகமதாபாத் சொத்து வரி வழிகாட்டி
- பெங்களூரு சொத்து வரி வழிகாட்டி
- சென்னை சொத்து வரி வழிகாட்டி
- டெல்லி சொத்து வரி வழிகாட்டி
- குருகிராம் சொத்து வரி வழிகாட்டி
- ஹைதராபாத் சொத்து வரி வழிகாட்டி
- கொல்கத்தா சொத்து வரி வழிகாட்டி
- மும்பை சொத்து வரி வழிகாட்டி
- புனே சொத்து வரி வழிகாட்டி
இதையும் வாசிக்க: கேரள நில வரி
நில வரி செலுத்துவது எப்படி?
இந்தியாவில் உள்ள பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் இப்போது ஆன்லைன் மூலம் நில வரி செலுத்தும் முறைக்கு மாறியுள்ளன. எனவே, நீங்கள் நகராட்சி அமைப்பின் வலைதளத்தில் ஆன்லைன் மூலம் நில வரி செலுத்தலாம் அல்லது உங்கள் மொபைல் போனில் உங்கள் நகராட்சி அமைப்பின் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். உங்கள் சொத்தின் தனித்துவ ஐடி மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பின் (PIN) எண்ணைப் பயன்படுத்தி, நில வரியை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். நெட் பேங்கிங், டெபிட் / கிரெடிட் கார்டு மற்றும் மொபைல் வாலட் போன்றவற்றைப் பயன்படுத்தியும் பணம் செலுத்தலாம். இல்லையேல், நீங்கள் நகராட்சி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று சொத்து வரியை ஆஃப்லைனில் செலுத்தலாம். அங்கு நீங்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து, அத்துடன் சொத்து வரியை காசோலை மூலம் செலுத்தலாம்.
இதையும் வாசிக்க: இந்தியாவில் ஆன்லைன் மூலம் நிலம் மற்றும் சொத்து பதிவு செய்வது எப்படி?
காலி மனை வரி
முன்பெல்லாம் காலி மனைக்கு வரி விதிப்பது பொதுவான நடைமுறையாக இருந்தது இல்லை. தற்போது பெரிய நகரங்களில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நகர எல்லையில் உள்ள காலி மனைகள் மற்றும் நிலங்களுக்கு நில வரி விதிக்கத் தொடங்கியுள்ளன.
காலி மனை ‘பிரீமியம்’ இடத்தில் அமைந்திருந்தால் இது பொருந்தும். இவ்வாறான இடங்களில் உள்ள காலி இடங்களுக்கு, அதிக விலை மதிப்புமிக்க வளங்களை வீணாகப் பயன்படுத்துவதாகக் கருதப்பட்டு, அந்த காலி மனைக்கு நகராட்சி அமைப்புகள் நில வரி விதிக்கின்றன.
இதையும் வாசிக்க: இந்தியாவில் காலி மனைக்கு வரி செலுத்த வேண்டுமா?
ஆன்லைன் மூலம் நில வரி செலுத்த தேவையான தகவல்கள்
நில வரியை ஆன்லைனில் செலுத்த விரும்பும் பயனர்கள் கீழ்கண்ட வைத்திருக்க வேண்டிய விவரங்கள்:
- பெயர்
- முகவரி
- சொத்து அடையாள எண்
- மின்னஞ்சல் முகவரி
- தொலைபேசி எண்
பணம் செலுத்துவதற்கு
- டெபிட் கார்டு விவரங்கள்
- கிரெடிட் விவரங்கள்
- நெட் பேங்கிங் விவரங்கள்
- இ-வேலட் அல்லது யுபிஐ விவரங்கள்
நில வரி மீதான சலுகைகள்
நாடு முழுவதும் உள்ள நகராட்சி அமைப்புகளால் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வரி செலுத்துவோருக்கு பல்வேறு வரிச் சலுகைகள் (Tax rebate) வழங்கப்படுகின்றன.
உரிமையாளரின் வயதைப் பொறுத்த சலுகை: மூத்த குடிமக்களின் சொத்துகளுக்கு வரி விகிதம் குறைவாக இருக்கும்.
இடத்தின் தன்மையைப் பொறுத்த சலுகை: வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உள்ள சொத்துகளுக்கு வரி விகிதம் குறைவாக இருக்கும்.
சொத்தின் பயன்பாட்டைப் பொறுத்த சலுகை: பொதுப் பயன்பாட்டிற்காக அல்லது அறக்கட்டளை தொண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளுக்கான வரி விகிதம் குறைவாக இருக்கும்.
சொத்தின் வயதைப் பொறுத்த சலுகை: சில நகரங்களில் பழைய சொத்துக்களுக்கு குறைந்த சொத்து வரி விதிக்கப்படுதிறது.
வசிக்கும் நாட்களைப் பொறுத்த சலுகை: சில நகரங்களில் குறிப்பிட்ட சொத்தில் நீண்ட காலம் ஒருவர் தங்கியிருந்தால் வரி விகிதங்கள் குறைவாக இருக்கும்.
உரிமையாளரின் வருவாயைப் பொறுத்த சலுகை: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருமானப் பிரிவினருக்கு நில வரி விகிதங்கள் குறைவாக இருக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
நில வரி என்றால் என்ன?
உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட சொத்தின் உரிமைக்காக, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்த வேண்டும். நிலம், அல்லது அந்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் வீடு, கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரியல் எஸ்டேட் உடைமைகளுக்கு, அதன் உரிமையாளர் ஆண்டுக்கு இருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை சொத்து வரி செலுத்த வேண்டும்.
யூனிட் ஏரியா மதிப்பீட்டு முறை என்றால் என்ன?
டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் பாட்னா நகராட்சிகள் நில வரியைக் கணக்கிட இந்த முறையைப் பயன்படுத்துகின்றன. இந்த அமைப்பின் படி, பில்ட்-அப் ஏரியா அல்லது கார்பெட் ஏரியாவின் அடிப்படையில் ஒரு யூனிட் விலை கணக்கிடப்பட்டு, அதன்படி சொத்தின் இருப்பிடம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. சொத்திலிருந்து எவ்வளவு வருமானம் வரும் என்பதன் அடிப்படையிலும் வரி விகிதம் அமையும்.