சொத்து வரி என்றால் என்ன, கணக்கீடு செய்து செலுத்துவது எப்படி? – இந்தியாவில் சொத்து வரி பற்றிய முழு விவரம்

சொத்து வரி விதிக்கப்படுவது எதற்காக, எப்படி என்பதுடன், அதை செலுத்துவதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள் பெறும் பலன்கள் என்ன என்பதையும் நாம் விரிவாக அலசுவோம்.

ஒரு சொத்தின் உரிமையாளராக ஆவதற்கு அந்தச் சொத்தினை வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அதேநேரத்தில், அந்த சொத்தின் உரிமையை தொடர்ந்து பராமரி்ப்பதற்கு அல்லது பாதுகாப்பதற்கு ஒரு சிறிய தொகையை சொத்து வரியாக தொடர்ந்து செலுத்த வேண்டும். சொத்து வரி என்பது சொத்துரிமை மீது விதிக்கப்படும் ஒரு நேரடி வரியாகும். இந்தியாவில் விதிக்கப்படும் சொத்து வரியானது உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடி வருமான ஆதாரமாகத் திகழ்கிறது. அசையா சொத்து வைத்திருக்கும் அதன் உரிமையாளர்கள் ஆண்டுதோறும் சொத்து வரி (property tax) செலுத்தியாக வேண்டும். இந்தக் கட்டுரை இந்தியாவில் சொத்து வரி செலுத்துவது தொடர்பான அனைத்து விஷயங்களையும் விரிவாக அலசுகிறது.

 

 

சொத்து வரி கணக்கிடப்படுவது எப்படி?

உள்ளாட்சி அமைப்பு (உதாரணமாக நகராட்சி) விதிக்கும் வரியை ஒரு சொத்தின் உரிமையாளர் செலுத்து வேண்டியது அவசியம். சொத்தின் மீது விதிக்கப்படும் அந்த வரி சொத்து வரி என்று அழைக்கப்படுகிறது. இந்த சொத்து வரி இடத்திற்கு இடம் மாறுபடும். இந்த சொத்து வரி பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அவை:

  • சொத்து அமைந்திருக்கும் இடம்
  • சொத்தின் அளவு
  • அந்தச் சொத்து கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதா அல்லது குடியேறும் நிலையில் உள்ளதா.
  • சொத்தின் உரிமையாளரது பாலினம் – பெண உரிமையாளர்களுக்கு வரியில் சலுகைகள் இருக்கலாம்
  • சொத்தின் உரிமையாளரின் வயது – மூத்தகுடிமக்களுக்கு வரியில் சலுகைகள் இருக்கலாம்.
  • சொத்து இருக்கும் இடத்திற்கு நகராட்சி அமைப்புகளால் வழங்கப்படும் வசதிகள்.

 

நாம் ஏன் சொத்து வரி செலுத்த வேண்டும்?

உள்ளூர் நகராட்சி அமைப்புகள் தனது எல்லைப் பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தல், குடிநீர் வழங்குதல், சாலைகளை பராமரித்தல், வடிகால் வசதி போன்ற முக்கியமான அடிப்படை வசதிகளை செய்து தருகிறது. இந்த சேவைகளை வழங்குவதற்கான நிதியானது சொத்து வரியின் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. சொத்து வரி என்பது நகராட்சி அமைப்பின் முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். நீங்கள் உங்களுடைய சொத்து வரியைச் செலுத்த தவறினால் நகராட்சி அமைப்பு உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்ணீர் இணைப்பு அல்லது பிற சேவைகளை நிறுத்தலாம். நீங்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கியை வசூல் செய்ய சட்டபூர்வ நடவடிக்கையில் ஈடுபடலாம்.

இதையும் வாசிக்க: இந்தியாவில் சொத்து பரிமாற்றப் பதிவு தொடர்பான சட்டங்கள்

 

சொத்து வரி செலுத்துவதன் முக்கியத்துவம்

நகராட்சி அமைப்புகளின் சமீபத்திய சொத்து மதிப்பீட்டின்படி சொத்து வரி கணக்கிடப்படுகிறது. சொத்தின் உரிமையாளரே சொத்து வரி செலுத்த வேண்டியவர் ஆவார். நீங்கள் ஒரு சொத்தினை குத்தகைக்கு எடுத்திருந்தால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவேளை சொத்தின் மீது ஏதாவது வில்லங்கம் அல்லது தகராறு ஏற்படும்போது, சொத்தின் உரிமையை நிரூபிப்பதில் சொத்து வரி ரசீது முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, நீங்கள் ஒரு சொத்தினை புதிதாக வாங்கும்போது, உள்ளூர் நகராட்சி அமைப்பின் ஆவணங்களில் சொத்தின் உரிமையை மாற்ற வேண்டியது அவசியமாகும். இதில் முக்கியமான ஒரு விஷயம், சொத்தின் மீது செலுத்த வேண்டிய பழைய நிலுவைத் தொகை ஏதாவது இருந்தால், அதனைச் செலுத்தி கணக்கை நேர் செய்யும் வரையில் சொத்தை புதிய உரிமையாளரின் பெயருக்கு மாற்ற முடியாது. நகராட்சிப் பதிவேடுகளில் புதிய உரிமையாளரின் பெயரை மாற்றாத நிலையில், சொத்து வரி ரசீதில் பழைய உரிமையாளரின் பெயரே தொடர்ந்து இருக்கும்.

ஒரு சொத்து உள்ளூர் நகராட்சிப் பதிவேடுகளில் உங்கள் பெயரில் புதிதாக மாற்றப்படும்போது அந்தச் சொத்தின் மீதான உரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் கேட்கப்படும். ஒரு சொத்தினை உங்கள் பெயரில் மாற்றுவதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்: விற்பனைப் பத்திரத்தின் நகல், சொசைட்டியின் அனுமதிச் சான்று, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், புகைப்படம், முகவரிச் சான்று, கடைசியாக செலுத்திய சொத்து வரி ரசீதின் நகல் முதலானவற்றை வழங்க வேண்டும். சொத்தின் மீது கடன் பெறுவதற்கு சொத்து வரி ரசீது ஒரு முக்கியமான  ஆவணமாகும்.

இதன் காரணமாக நீங்கள் சரியான காலத்தில் முறையாக சொத்து வரி செலுத்தி உள்ளூர் நகராட்சி அமைப்புகளில் ஆவணங்களை  சரியாக புதுப்பித்திருக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்கள், அரசு கட்டிடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் போன்றவற்றுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் இல்லாத நிலத்திற்கும் சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நீங்கள், உங்களுடைய சொத்து வரியை உள்ளூர் நகராட்சி அமைப்பிற்கு நேரடியாக சென்றும் செலுத்தலாம். அதேபோல ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான நகராட்சிகள் சொத்து வரியை ஆன்லைன் மூலமாக செலுத்துவதை ஊக்குவிக்கின்றன. அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளன.

நகரம் சொத்து வரி செலுத்த லிங்க்
கிரேட்டர் ஹைதரபாத் நகராட்சி கார்ப்பரேஷன் https://ptghmconlinepayment.cgg.gov.in/PtOnlinePayment.do
புனே நகராட்சி கார்ப்பரேஷன் http://propertytax.punecorporation.org/
பிசிஎம்சி http://203.129.227.16:8080/pcmc/
நவி மும்பை நகராட்சி கார்ப்பரேஷன் (என்எம்எம்சி) https://www.nmmc.gov.in/property-tax2
கிரேட்டர் மும்பை நகராட்சி கார்ப்பரேஷன் (எம்சிஜிஎம்) https://ptaxportal.mcgm.gov.in/CitizenPortal/#/login
டெல்லி நகராட்சி கார்ப்பரேஷன் (எம்சிடி) http://www.mcdpropertytax.in/
நொய்டா ஆணையம் https://www.noidaauthorityonline.com/
குர்காவ் நகராட்சி கார்ப்பரேஷன் http://www.mcg.gov.in/HouseTax.aspx
அகமதாபாத் நகராட்சி கார்ப்பரேஷன் http://ahmedabadcity.gov.in/portal/web?requestType=ApplicationRH&actionVal=loadQuickPayPropertyTax&queryType=Select&screenId=1400001
கொல்கத்தா நகராட்சி கார்ப்பரேஷன் (கேஎம்சி) https://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCAssessmentCurrentPD.jsp
ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) https://bbmptax.karnataka.gov.in/
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் http://www.chennaicorporation.gov.in/online-civic-services/editPropertytaxpayment.do?do=getCombo

குறிப்பு: மேற்கண்ட லிங்குகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ வலைதளங்களில் இருந்து ஆகஸ்ட் 8, 2017-ல் எடுக்கப்பட்டவை.

இதையும் வாசிக்க: கோயம்புத்தூர் சொத்து வரி செலுத்திட ஒரு வழிகாட்டுதல்

 

சொத்து வரி கணக்கீடு

புனேவில் சொத்து வரி

பிஎம்சி எனப்படும் புனே நகராட்சி கார்ப்பரேஷன் சொத்து வரியைக் கணக்கிட ஒரு ஆன்லைன் கணக்கீட்டு முறையை வழங்குகிறது. அதில், உங்களின் சொத்து இருக்கும் இடம், பகுதி, சொத்தின் பயன்பாடு, சொத்தின் வகை, சொத்தின் மொத்தப் பரப்பு, அது கட்டப்பட்ட வருடம் போன்ற விபரங்களை பதிவு செய்து, நீங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியை அறியலாம்.

பெங்களூருவில் சொத்து வரி

ப்ருஹத் பெங்களூரு மாநகர பாலிகே எனப்படும் பிபிஎம்பி சொத்து வரியைக் கணக்கிட யூனிட் ஏரியா மதிப்பு (Unit Area Value) முறையைப் பின்பற்றுகிறது.

சொத்து வரி (K) = (G – I) X 20%

இங்கு G = X + Y + Z and I = G X H/100

(G = மொத்த  யூனிட் பகுதியின் மதிப்பு; X = சொத்தின் குத்தகைப் பகுதி  X ஒரு சதுர அடி சொத்தின் விலை X 10 மாதங்கள்; Y = சொத்தின் சுயகுடியேற்றப் பகுதி  X ஒரு சதுர அடி சொத்தின் விலை X 10 மாதங்கள்; Z = வாகனம் நிறுத்தும் பகுதி  X வாகன நிறுத்துமிடத்தின் ஒரு சதுர அடிக்கான விலை X 10 மாதங்கள்; H = தேய்மான விகிதத்தின் சதவீதம், இது சொத்தின் வயது அல்லது ஆண்டைப் பொறுத்தது).

மும்பையில் சொத்து வரி

பிரிஹன் மும்பை நகராட்சி கார்ப்பரேஷன் எனப்படும் பிஎம்சி சொத்து வரியினைக் கணக்கிடுவதற்கு மூலதன மதிப்பீட்டு முறையை (Capital Value System) கடைபிடிக்கிறது. அதன்படி கீழ்கண்ட முறையில் சொத்து வரி கணக்கிடப்படுகிறது:

சொத்தின் மூலதன மதிப்பு X தற்போதைய சொத்து வரி விகிதம் (%) X பயனர் வகையின் மதிப்பு

மார்ச் 8, 2019 அன்று மகாராஷ்டிரா அமைச்சரவை, மும்பை மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் 500 சதுர அடி வரையிலான  குடியிப்புகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிப்பதற்கு ஒப்புதல் அளித்தது. ‘ப்ராப்பர்டி டேக்ஸ் பில் ஆன்லைன் மும்பை’ என்பது MCGM எனப்படும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆஃப் கிரேட்டர் மும்பைக்கான சொத்து வரியை செலுத்துவதற்கான ஒரு வசதியாகும். மும்பை மாநகராட்சிக்கான சொத்து வரியை portal.mcgm.gov.in என்ற வலைதளத்துக்குச் சென்று ஆன்லைனில் செலுத்தலாம்.

சொத்தின் விலை மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் சொத்து வரியை என்எம்எம்சி வசூலிக்கிறது.

டெல்லியில் சொத்து வரி

டெல்லி நகராட்சி கார்ப்பரேஷன் (MCD) சொத்து வரியை கணக்கிடுவதற்கு யூனிட் ஏரியா முறையைப் பயன்படுத்துகிறது. அதன்படி, கீழ்கண்ட முறையில் சொத்து வரி கணக்கிடப்படுகிறது:

சொத்து வரி = வருடாந்திர மதிப்பு  X வரி விகிதம்

இங்கே,

ஆண்டு மதிப்பு = ஒரு சதுர மீட்டருக்கான யூனிட் ஏரியா மதிப்பு X சொத்தின் யூனிட் ஏரியா X சொத்து வயது X சொத்தின் பயன்பாடு X கட்டமைப்பு X குடியிருப்பு

சென்னையில் சொத்து வரி

சென்னை பெருநகர மாநகராட்சி எனப்படும் ஜிசிசி (GCC) ஒரு சொத்தின் ஆண்டு வாடகை மதிப்பினைக் கணக்கிடுவதற்கு, ரீசனபில் லெட்டிங் வேல்யூ முறையை பின்பற்றுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி சொத்து வரியை கணக்கிடுவதற்கு கீழ்கண்ட காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

  • கட்டிடத்தின் அடிப்பகுதி
  • கட்டிடம் அமைந்துள்ள தெருவின் அடிப்படை விலை விகிதம்
  • கட்டிடத்தின் பயன்பாடு (குடியிருப்பு அல்லது குடியிருப்பு அல்லாதது)
  • கட்டிட உரிமையின் வகை (சொந்தம் அல்லது வாடகை)
  • கட்டிடத்தின் வயது அல்லது ஆண்டு

ஹைதராபாத்தில் சொத்து வரி

ஹைதராபாத்தில் சொத்து வரி வருடாந்திர வாடகை மதிப்பை (annual rental value) அடிப்படையாகக் கொண்டு  கணக்கிடப்படுகிறது. மேலும் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (GHMC) குடியிருப்புச் சொத்துக்களுக்கு அதன் வருமானத்தின் அடிப்படையில் வரி விதிப்பதை ஏற்றுக்கொள்கிறது.

ஜிஎச்எம்சி சொத்து வரியைக் கணக்கிடுவதற்கு கீழ்கண்ட முறையை பின்பற்றுகிறது:

வருடாந்திர சொத்து வரி = கட்டிடத்தின் அடிப்பகுதி  X ஒரு சதுர அடிக்கான மாதாந்திர வாடகை மதிப்பு X 12 X (0.17 – 0.30) எம்ஆர்வி மற்றும் வரி விதிப்பிற்கான ஸ்லேப் விகிதப்படி 10 சதவீதம் கழிவு அல்லது தேய்மானம் + 8 சதவீதம் நூலக வரி

கொல்கத்தாவில் சொத்து வரி

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சொத்து வரி கணக்கீட்டிற்கான  யூனிட் ஏரியா மதிப்பீடு என்ற புதிய முறையை கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (KMC) அமல்படுத்தியது. சொத்து வரியைக் கணக்கிட Multiplicative factors (MFs) கூட்டுக் காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, வரி கணக்கீட்டிற்காக ஒரே குடியிருப்பில் உள்ள வீடுகளில் இருக்கும் பல்வேறு காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

யூனிட் ஏரியா மதிப்பீட்டு முறையின்படி பின்வரும் முறையில் சொத்து வரி கணக்கிடப்படுகிறது:

ஆண்டு வரி = அடிப்படை யூனிட் ஏரியா மதிப்பு X கட்டிடம் ஆக்கிரமித்திருக்கும் இடம், நிலப்பரப்பு X கட்டிடத்தின் இருக்கும் இடத்தின்  MF மதிப்பு X பயன்பாட்டு MF மதிப்பு X வயது MF மதிப்பு X கட்டமைப்பு MF மதிப்பு X ஆக்கிரமிப்பு MF மதிப்பு X வரி விகிதம் (HB வரி உட்பட)

(குறிப்பு: HB வரி என்பது ஹவுரா பிரிட்ஜ் வரியைக் குறிக்கும். இது குறிப்பிட்ட வார்டுகளில் உள்ள சொத்துகளுக்கு மட்டுமே பொருந்தும்.)

அகமதாபாத்தில் சொத்து வரி

ஏஎம்சி என அறியப்படும் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (Amdavad Municipal Corporation) சொத்து வரியை சொத்தினுடைய மூலதன மதிப்பீல் கணக்கிடுகிறது. அதன்படி  பின்வரும் வழிமுறையை பின்பற்றி சொத்து வரி கணக்கிடப்படுகிறது.

சொத்து வரி = ஏரியா X விலை X (f1 X f2 X f3 X f4 X fn)

இங்கு

f1 = சொத்து இருக்கும் இடத்திற்கான வெயிட்டேஜ்

f2 = சொத்தின் வகைக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ்

f3 = சொத்தின் வயது அல்லது ஆண்டுக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ்

f4 = குடியிருப்புக் கட்டிடங்களுக்கு வழங்கப்படும் மதிப்பு

fn = சொத்தை பயன்படுத்துபவருக்கு வழங்கப்படும் மதிப்பு

குருகிராமில் சொத்து வரி

குருகிராமில் சொத்து அமைந்திருக்கும் இடம் – அதன் பயன்பாடு (குடியிருப்பு / வணிகமற்றது மற்றும் வணிகம்) ஆகிய இரண்டு காரணிகளின் அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. குருகிராமில் சொத்து வரியை ஆன்லைன் மூலம் செலுத்துவது ஒரு சிறந்த வழிமுறையாகும். முனிசிபல் கார்ப்பரேஷன் ஆஃப் குருகிராம் (Municipal Corporation of Gurugram – MCG) இணையதளத்திற்குள் சென்று உங்களுடைய பிரத்யேக சொத்திற்காக அடையாள எண் அல்லது உங்களுடைய பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து, நீங்கள் செலுத்த வேண்டிய வரியை அறிந்து கொள்ளலாம்.

சண்டிகரில் சொத்து வரி

சண்டிகரில் பிளாட்களுக்கான சொத்து வரியை கணக்கிடுவதற்கு தரைதளத்தில் இருக்கும் ப்ளிந்த் ஏரியா எனப்படும் கட்டிடத்தின் அடிப்பகுதிக்கு வெளியே இருக்கும் காலி மனையே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது, 500 சதுர கஜம் உள்ள ப்ளாட்டில், 300 சதுர கஜம் ப்ளிந்த் ஏரியா என்றால் மீதமுள்ள 200 சதுர கஜத்திற்கே சொத்து வரி கணக்கிடப்படும்.

300 சதுர கஜம் வரையுள்ள குடியிருப்பு பிளாட் கட்டிடங்களில் சொந்தமாக குடியிருக்கும் கடற்படை, ராணுவம் அல்லது விமானப் படைகளில் பணியாற்றுகின்ற அல்லது பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், கணவரை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சொத்து வரி விதிக்கப்படுவது இல்லை.

சண்டிகர்வாசிகள் இணையதளத்தில் தங்களின் சொத்துக்கான அடையாள எண்ணைப் பதிந்து சொத்து விவரங்களை அறிவதன் மூலம் ஆன்லைன் வழியாக சொத்து வரி குறித்து அறிந்துகொள்ள முடியும். அதேபோல, வீடு மற்றும் செக்டார் எண்ணை பதிந்து சொத்து விவரங்களை பெற்று சொத்து வரியை ஆன்லைன் மூலமாக செலுத்த முடியும். சண்டிகரில் உள்ள அனைத்து இ-சம்பர்க் மையங்களில் சொத்து வரியை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

நாக்பூரில் சொத்து வரி

நாக்பூரில் யூனிட் ஏரியா முறையில் சொத்து வரி கணக்கிடப்படுகிறது. சொத்தினுடைய விகிதத்தால் பெருக்கப்படும் வருடாந்திர மதிப்பு நாக்பூக் சொத்து வரிக்கு சமமாக எடுத்துக் கொள்ளப்படும். நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆன்லைனில் சொத்து வரி கணக்கிடுவதற்கு ஒரு வழிமுறையை வைத்திருக்கிறது. அதில் தேவையான சொத்து விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் அப்போதைய சொத்து வரியை அறிந்து கொள்ள முடியும்.

நொய்டாவில் சொத்து வரி

நொய்டாவில், ஒரு சொத்தின் வருடாந்திர மதிப்பில் ஒரு பகுதி சொத்து வரியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொத்து அமைந்திருக்கும் இடத்தினைப் பொறுத்து அதன் ஆண்டு மதிப்பை கணக்கிடுகின்றனர்.

கொச்சியில் சொத்து வரி

கொச்சியில் பிளிந்த் ஏரியாவின் அடிப்படையில் சொத்து வரி கணக்கிடப்படுகிறது. இந்த சொத்து வரி கட்டணம் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் மாறுப்பட்டு இருக்கும்.

 

சொத்து வரி மீதான விலக்குகள்

சொத்து வரிக்கான விதிகள் நகரத்திற்கு நகரம், மாநிலத்திற்கு மாநிலம் மாறுப்பட்டிருந்தாலும் சில வகையான சொத்து உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரி செலுத்த வேண்டியதில் இருந்து சலுகை பெருகிறவர்களாக இருக்கிறார்கள்.

எல்லா அரசுகளும், மதம் சார்ந்த கட்டிடங்கள், அரசு கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பதில்லை.

பொதுவாக சொத்து வரி விலக்கு பெறுபவர்கள்

  • மூத்தகுடிமக்கள்
  • மாற்றுத் திறனாளிகள்
  • முன்னாள் ராணுவம், கடற்படை அல்லது பாதுகாப்பு படையில் பணிபுரிந்தவர்கள்
  • இந்திய ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, காவல் துறை, சிஆர்பிஎஃப் படைகளில் உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தினர்.
  • கல்வி நிறுவனங்கள்
  • விவசாய சொத்துக்கள்

பல்வேறு வகைகளில் சொத்து வரியில் பெரிய அளவில் விலக்கு அளிக்கப்படுவதால் இந்தியாவின் உள்ளாட்சி அமைப்புகளால் போதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடிவதில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்தக் காரணத்தால், வருமான ஆதாரத்தினை பெருக்குவதற்காக சில வகை விலக்குகளை உள்ளாட்சி அமைப்புகள் திரும்பப் பெற வேண்டும் என்று நிபுணர்கள் கூறிவருகின்றனர். இருந்தாலும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதால், விலக்குகளைத் திரும்பப் பெறுவது சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.

 

சொத்து வரி செலுத்தாவிட்டால் விதிக்கப்படும் அபராதம்

நாடு முழுவதிலும் சொத்து வரி செலுத்த தாமதமாகும்போது அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுகிறது. நீங்கள் வசிக்கும் நகரத்தினைப் பொறுத்து சொத்து வரியின் நிலுவைத் தொகையில் மாதத்திற்கு 1 முதல் 2 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படுகிறது. பிர்ஹான் மும்பை கார்ப்பரேஷன் நிலுவைத் தொகையில் 1 சதவீதம் அபராதமாக விதிக்கிறது. இது பெங்களூருவில் 2 சதவீதமாக இருக்கிறது. நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் இருக்கும்போது இழப்பீடுகளை ஈடுகட்டுவதற்கு அதிகாரிகள் அந்த சொத்தினை விற்பனை செய்ய முடியும். நீண்ட காலமாக சொத்து வரி செலுத்த தவறும்போது எந்தெந்த சொத்துக்கள் விற்கப்படும் என்ற பட்டியலை என்எம்எம்சி வெளியிட்டுள்ளது.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஆன்லைனில் சொத்து வரியை செலுத்துவது எப்படி?

பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் ஆன்லைன் முறையில் சொத்து வரி செலுத்துவதை ஏற்றுக்கொள்கின்றன. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளத்திற்குச் சென்று சொத்து வரியை செலுத்த முடியும். இதற்காக உங்களுடைய சொத்தின் அடையாள எண் தேவைப்படும். அதனை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் சொத்து வரியை அறிந்து பணம் செலுத்தலாம்.

ஆன்லைனில் சொத்து வரி கணக்கிடுவது எப்படி?

ஒரு நிலம் என்பது அது அமைந்திருக்கும் மாநிலத்திற்குரிய பொருளாகும். ஒவ்வொரு நகரமும், அதன் குடியிருப்புப் பகுதி, அதன் அமைவிடம் போன்றவற்றின் அடிப்படையில் சொத்து வரி கணக்கீட்டிற்கு பல்வேறு வழிமுறைகளைக் கடைபிடிக்கின்றன.

விவசாய நிலத்திற்கு சொத்து வரி செலுத்த வேண்டுமா?

இந்தியாவில் சொத்து வரி கட்டுவதிலிருந்து விவசாய நிலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

Was this article useful?
  • 😃 (1)
  • 😐 (0)
  • 😔 (0)

Recent Podcasts

  • Casagrand சென்னையில் பிரெஞ்சு கருப்பொருள் குடியிருப்பு சமூகத்தை அறிமுகப்படுத்துகிறது
  • கொச்சி வாட்டர் மெட்ரோ படகுகள் உயர் நீதிமன்றம்-ஃபோர்ட் கொச்சி வழித்தடத்தில் சேவையைத் தொடங்குகின்றன
  • மெட்ரோ வசதிகள் கொண்ட அதிகபட்ச நகரங்களைக் கொண்ட மாநிலமாக உ.பி
  • உங்கள் இடத்தை மேம்படுத்த நேர்த்தியான மார்பிள் டிவி யூனிட் வடிவமைப்புகள்
  • 64% HNI முதலீட்டாளர்கள் CRE இல் பகுதி உரிமை முதலீட்டை விரும்புகிறார்கள்: அறிக்கை
  • பாக்டீரியா எதிர்ப்பு வண்ணப்பூச்சு என்றால் என்ன, அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?